கோலாலம்பூர்:
மாணவர்கள் மத்தியில் சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், சட்டவிரோத மோட்டார் சைக்கிள் பந்தயங்களைத் (Illegal Racing) தடுக்கவும் கோலாலம்பூரில் உள்ள 122 இடைநிலைப் பள்ளிகளில் (Secondary Schools) தங்களது கண்காணிப்பு நடவடிக்கைகளைப் போலீஸார் இருமடங்காக அதிகரிக்கவுள்ளனர்.
‘போக்குவரத்து விழிப்புணர்வு ஆதரவுத் திட்டம்’ (Traffic Awareness Support Programme) என்னும் இந்த புதிய அதிரடி நடவடிக்கையைக் கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ பாடில் மர்சுஸ் இன்று செராஸ், ஆலாம் டமாய் தேசிய இடைநிலைப் பள்ளியில் (SMK Alam Damai) அதிகாரபூர்வமாகத் தொடக்கி வைத்தார். இத்திட்டத்தின் கீழ் குற்றத் தடுப்பை மேலும் வலுப்படுத்துவதற்காக, போக்குவரத்துப் பிரிவு மட்டுமின்றி காவல்துறையின் பிற முக்கியப் பிரிவுகளும் ஒன்றிணைந்து ஈடுபடுத்தப்படவுள்ளன.
நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ பாடில் மர்சுஸ்: “அண்மைக்காலமாகச் சட்டவிரோதப் பந்தயங்கள் போன்ற ஆபத்தான போக்குவரத்துச் சார்ந்த குற்றங்களில் சில பள்ளி மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ள சூழல் கவலையளிக்கிறது. இளம் வயதிலேயே சாலைப் பாதுகாப்பு விதிகளையும், சட்டங்களையும் மதிக்கும் பண்பாட்டை மாணவர்களின் மனங்களில் ஆழமாக வளர்ப்பதும், ஆபத்தான செயல்களில் இளைஞர்கள் தங்களை ஈடுபடுத்திக் கொள்வதைக் குறைப்பதுமே இத்திட்டத்தின் முதன்மை நோக்கமாகும்.”
இனிவரும் நாட்களில், பள்ளிகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் போலீஸாரின் ரோந்துப் பணிகள் தீவிரப்படுத்தப்படும் என்றும், மாணவர்களுக்கான விழிப்புணர்வுப் பயிலரங்குகள் தொடர்ச்சியாக நடத்தப்படும் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





















