அஷ்ஹாபாத் (துருக்மெனிஸ்தான்):
டாடர்ஸ்தான் குடியரசின் கசான் நகருக்கான தனது இருநாள் வேலைப் பயணத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்ட மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம், மத்திய ஆசியப் பயணத்தின் அடுத்த கட்டமாகத் துருக்மெனிஸ்தான் தலைநகர் அஷ்ஹாபாத் சென்றடைந்தார்.
அந்நாட்டு அதிபர் செர்தார் பெர்டிமுஹமடோவின் அதிகாரப்பூர்வ அழைப்பை ஏற்று, ஜூன் 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் மேற்கொள்ளப்படும் இந்த இருநாள் பயணமானது, அன்வார் இப்ராகிம் பிரதமராகப் பொறுப்பேற்ற பிறகு துருக்மெனிஸ்தான் செல்லும் முதல் பயணமாகும்.
பிரதமருடன் முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ஜோஹாரி அப்துல் கானி, பொருளாதார அமைச்சர் அக்மல் நஸ்ருல்லா முகமது நாசிர் மற்றும் பிரதமர் அலுவலகம், வெளியுறவு அமைச்சின் உயர் அதிகாரிகள் இப்பயணத்தில் பங்கேற்றுள்ளனர்.
அஷ்ஹாபாத் சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த பிரதமரை, துருக்மெனிஸ்தானுக்கான மலேசியத் தூதர் முகமது சுஹைமி அகமது தாஜுதீன் மற்றும் அந்நாட்டின் எண்ணெய் மற்றும் எரிவாயுவுக்கான அமைச்சரவை துணைத் தலைவர் குவாஞ்ச் அகஜானோவ் ஆகியோர் முறைப்படி வரவேற்றனர்.
பயணத்தின் முக்கிய நிகழ்ச்சிகள்:இன்று (ஜூன் 19) அதிபர் மாளிகையில் நடைபெறும் அதிகாரப்பூர்வ வரவேற்பு நிகழ்ச்சியுடன் இருநாட்டுத் தலைவர்களின் சந்திப்பு தொடங்குகிறது. இதனைத் தொடர்ந்து இருதரப்புப் பேச்சுவார்த்தைகள், கூட்டு அறிக்கை வெளியீடு மற்றும் இரு அரசாங்கங்களுக்கு இடையிலான உடன்படிக்கைகள் (MoU) பரிமாறிக்கொள்ளப்படவுள்ளன. மேலும், பிரதமர் அன்வார் இப்ராகிம் அங்குள்ள புகழ்பெற்ற கிப்சாக் (Gypjak) மசூதியில் இன்று வெள்ளிக்கிழமை தொழுகையில் ஈடுபடவுள்ளார்.
மத்திய ஆசிய நாடுகளில் மலேசியாவின் 4-வது பெரிய வர்த்தகக் கூட்டாளியாகத் துருக்மெனிஸ்தான் திகழ்கிறது. 2025-இல் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒட்டுமொத்த வர்த்தகம் RM75.80 மில்லியனை எட்டியுள்ளது.




















