தும்பாட்டில் பதின்ம வயது சிறுமியைத் தாக்கி, கொள்ளையடித்து, பாலியல் வன்புணர்வு செய்த ஆடவருக்கு போலீஸ் வலை வீச்சு!

கோலாலம்பூர்:

தும்பாட் பாலேக்பாங்கில் (Palekbang) நேற்று புதர்க்காடு ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்ட 15 வயது சிறுமி, அடையாளம் தெரியாத நபரால் மரக்கட்டையால் முகம் மற்றும் தலையில் கொடூரமாகத் தாக்கப்பட்டு, பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்.

கம்பங் மெசிராவில் (Kampung Mesira) உள்ள நீர்ப்பாசனக் கால்வாய் அருகே இந்த அதிர்ச்சி தரும் சம்பவம் நடந்துள்ளதாக மாவட்ட காவல் துறைத் தலைவர் அசிஸ்டண்ட் கமிஷனர் முகமட் கைரி ஷாஃபி தெரிவித்தார். பாதிக்கப்பட்ட சிறுமியை வன்புணர்வு செய்ததோடு மட்டுமல்லாமல், அந்த சிறுமியின் கைபேசியையும் அந்த நபர் கொள்ளையடித்துச் சென்றுள்ளார்.

நேற்று காலை 7 மணியளவில் வீட்டை விட்டு உடற்பயிற்சிக்காக (Jogging) வெளியேறிய தனது மகள் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால், அவரது தந்தை காலை 10 மணியளவில் தேடத் தொடங்கியுள்ளார். பின்னர், நீர்ப்பாசனக் கால்வாய் அருகிலுள்ள புதர்க்காட்டில் அச்சிறுமி காயங்களுடன் கிடப்பதை பொதுமக்கள் பார்த்து அவரது தந்தைக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.

சம்பவ இடத்திற்குத் தந்தை விரைந்து சென்றபோது, சிறுமி முகம், தலை மற்றும் உடலில் பலத்த காயங்களுடன் அரை மயக்க நிலையில் கிடந்துள்ளார். இச்சம்பவம் குறித்து சிறுமியின் தந்தை இன்று காலை 11 மணியளவில் காவல் துறையில் புகார் அளித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுமிக்கு முதலில் தும்பாட் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக கோத்தா பாருவில் உள்ள ராஜா பெரெம்புவான் ஜைனாப் II (Raja Perempuan Zainab II) மருத்துவமனைக்கு அவர் மாற்றப்பட்டார்.

இக்குற்றம் தொடர்பாக, பாலியல் வன்புணர்வுக்கான தண்டனைச் சட்டம் பிரிவு 376 (Section 376 of the Penal Code) மற்றும் கொள்ளையின் போது வேண்டுமென்றே காயப்படுத்துவதற்கான பிரிவு 394 ஆகியவற்றின் கீழ் காவல் துறையினர் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். தப்பியோடிய சந்தேக நபரைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here