கோலாலம்பூர்:
கெடாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய கெடா மாநில போக்குவரத்துத் இலாகா இயக்குனர் ஸ்டயென் வான் லூதாம், சுங்கை பட்டாணியில் நேற்று ஜேபிஜே சோதனையிலிருந்து தப்பியோட முயன்ற ‘பெரோடுவா கெலிசா’ காரைப் பின்தொடர்ந்து மடக்கிப் பிடித்தபோது அதனை ஒரு ரோஹிங்ஞா அகதி ஓட்டியது தெரியவந்தது என்று கூறினார்.
பாடாங் தெமுசு சாலையில் நடத்தப்பட்ட ‘ஒப்ஸ் பேவா’ (Ops PEWA) சிறப்பு சோதனையின் போது நாற்பத்தைந்து வயது மதிக்கத்தக்க அந்த ஓட்டுநரிடம் முறையான ஓட்டுநர் உரிமம் இல்லாததுடன், அவர் பல போக்குவரத்து விதிகளையும் மீறியுள்ளது கண்டறியப்பட்டது.
ஆபத்தான முறையில் காரைச் செலுத்தியது மற்றும் சிக்னல் விளக்குகள் வேலை செய்யாதது உள்ளிட்ட ஐந்து தவறுகளுக்காக அந்தக் கார் பறிமுதல் செய்யப்பட்டு தற்போது கோலா கெட்டில் ஜேபிஜே முனையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
தப்பியோட முயலும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை தொடரும் என்று எச்சரித்த இயக்குனர், உரிமம் இல்லாத வெளிநாட்டவருக்குத் தன் காரைக் கொடுத்த காரின் உரிமையாளருக்கும் நீதிமன்ற சம்மன் அனுப்பப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.




















