மலாக்கா:
மலாக்காவில் கடந்த ஜூலை 1-ஆம் தேதி முதல் நடத்தப்பட்டு வரும் கூட்டு போதைப்பொருள் தடுப்பு அதிரடி சோதனையில் (Operasi Bersepadu Dadah), போதைப்பொருள் உட்கொண்டிருந்த 8 ஓட்டுநர்களும் 4 ஓட்டுநர் உதவியாளர்களும் (Kelindan) பிடிபட்டுள்ளனர்.
மாநில சாலைப் போக்குவரத்துத் துறை (JPJ) மற்றும் தேசிய போதைப்பொருள் ஒழிப்பு முகமை (AADK) ஆகியவை இணைந்து நடத்திய இந்தச் சோதனையில், மொத்தம் 164 வாகனங்கள் தீவிர பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக மலாக்கா JPJ இயக்குநர் சித்தி ஜாரினா முகமட் யூசோப் தெரிவித்துள்ளார்.
பரிசோதிக்கப்பட்ட வாகனங்களில் 152 சரக்கு வாகனங்கள் (Goods vehicles), 9 சுற்றுலா வாகனங்கள் மற்றும் 3 பொதுச் சேவை வாகனங்கள் அடங்கும்.
அதில் சிறுநீர் பரிசோதனையில் சிக்கிய 8 ஓட்டுநர்களில் 5 பேர் ‘மெத்தம்பேட்டமின்’ (Methamphetamine) உட்கொண்டிருந்தது உறுதியானது. மற்றவர்கள் கஞ்சா, ஐஸ் (Methamphetamine crystal), மார்ஃபின் போன்ற போதைப்பொருட்களைப் பயன்படுத்தியுள்ளனர்.
மேலும் கைதுசெய்யப்பட்ட 4 உதவியாளர்களில் ஒருவர் மெத்தம்பேட்டமின், இருவர் கஞ்சா (THC) மற்றும் ஒருவர் அபின் (Opiate) உட்கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவர்கள் அனைவரும் மேலதிக நடவடிக்கைக்காக AADK-விடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
போதைப்பொருள் ஓட்டுநர்கள் ஓட்டி வந்த வாகனங்களில் 5 கார்கோ லோரிகள், 4 பிரைம் மூவர் (Prime mover) இழுவை வாகனங்கள் மற்றும் 3 லூட்டன் (Luton) ரக லோரிகள் அடங்கும்.
பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் செயல்பட்ட இந்த ஓட்டுநர்களின் தொழில்முறை ஓட்டுநர் உரிமங்களை (PSV/GDL) முடக்குவதோடு, அவர்களின் சாதாரண ஓட்டுநர் உரிமங்களையும் இடைநீக்கம் (Suspend) செய்ய கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என JPJ இயக்குநர் எச்சரித்துள்ளார்.




















