(கோகி கருணாநிதி)
ஜோகூர் பாரு:
ஜோகூர் மாநிலத்தின் 2026–2031 நிர்வாகக் காலத்திற்கான புதிய மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்கள் நேற்று ஜோகூர் அரண்மனையில் நடைபெற்ற விழாவில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டு அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்றனர்.
கடந்த ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற 16ஆவது ஜோகூர் மாநில சட்டமன்றத் தேர்தலில் தேசிய முன்னணி பெரும்பான்மை வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை அமைத்ததைத் தொடர்ந்து, டத்தோ ஒன் ஹபீஸ் காசி 19ஆவது ஜோகூர் மந்திரி பெசாராக பதவியேற்றார். இதனைத் தொடர்ந்து, மாநில நிர்வாகத்தை முன்னெடுக்கும் 10 பேர் கொண்ட மாநில ஆட்சிக்குழுவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய ஆட்சிக்குழுவில் முகமது ஜாஃப்னி பின் ஷுகோர் – வீடமைப்பு, உள்ளூராட்சி, முகமது ஹைரி பின் ஷா – இளைஞர், விளையாட்டு, தொழில்முனைவோர், கூட்டுறவு, முகமது பாரேட் பின் முகமது காலிட் – இஸ்லாமிய சமய விவகாரங்கள், லிங் தியான் சூன் – சுகாதாரம், சுற்றுச்சூழல், லீ திங் ஹான் – முதலீடு, வர்த்தகம், நுகர்வோர் விவகாரம், மனிதவள மேம்பாடு, முகமது ஃபாஸ்லி பின் முகமது சாலே – பொதுப்பணிகள், போக்குவரத்து, உள்கட்டமைப்பு, தொடர்பு, ஹஸ்ருனிசா பிந்தி ஹசன் – மகளிர், குடும்பம், சமூக மேம்பாடு, முகமட் இஸ்ராக் பின் அப்துல்லா – விபசாயம், விபசாயம் சார்ந்த தொழில், கிராமப்புற மேம்பாடு, டாக்டர் முகமது நகீப் பின் கசாலி – கல்வி, தகவல், பி. பன்னீர் செல்வம் – ஒற்றுமை, பாரம்பரியம், கலாச்சாரம் ஆகிய இலாகாக்களின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளனர்.

ம.இ.கா.வைச் சேர்ந்த பெர்லிங் சட்டமன்ற உறுப்பினர் பி. பன்னீர் செல்வத்திற்கு ஒற்றுமை, பாரம்பரியம், கலாச்சாரம் ஆகிய முக்கிய இலாகாக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. மாநிலத்தின் பல்வேறு இன மக்களிடையே நல்லிணக்கத்தை வலுப்படுத்துதல், ஜோகூரின் பாரம்பரிய மரபுகளைப் பாதுகாத்தல் மற்றும் கலை, கலாச்சார வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்வது அவரது இலாகாவின் முக்கிய பொறுப்பாக இருக்கும்.
புதிய ஆட்சிக்குழுவின் பதவியேற்புடன், ஜோகூர் மாநில அரசின் 2026–2031 நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக முழுமை பெற்றுள்ளதுடன், மாநில வளர்ச்சி, பொருளாதாரம், சமூக நலன் மற்றும் மக்கள் சேவையை முன்னிலைப்படுத்தும் வகையில் புதிய நிர்வாகம் செயல்படவுள்ளது.




















