கோயம்புத்தூர் மத்திய சிறையில் ரகளை; கையை அறுத்துக்கொண்டு கைதிகள் ஆர்ப்பாட்டம்

கோயம்புத்தூர்:

கோயம்புத்தூர் மத்திய சிறைச்சாலையில் நடந்த கலவரத்தில் அதிகாரிகள் நான்கு பேர் காயமடைந்தனர்.

அந்தச் சிறைச்சாலையில் விசாரணைக் காவலில் வைக்கப்பட்டு இருக்கும் கைதிகள் திடீரென ஆர்ப்பாட்டத்தில் குதித்ததை அடுத்து பதற்றம் நிலவியது.

அவர்களில் ஏழு பேர் மரங்களில் ஏறிக்கொண்டு தங்கள் கைகளை பிளேடால் கிழித்துக்கொண்டதாக மத்திய சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

அவர்களை அடக்கி ஒடுக்குவதற்கு அதிகாரிகள் மேற்கொண்ட முயற்சியின்போது அதிகாரிகள் நான்கு பேருக்கு காயம் ஏற்பட்டது.

அந்த மத்திய சிறையில் நான்கு தனித்தனியான புளோக்குகள் இருக்கின்றன.

அவற்றில் ஒரு கட்டடத்தில் சுமார் 600 விசாரணைக் கைதிகள் வைக்கப்பட்டு இருக்கிறார்கள்.

அதிகாலை 6 மணிக்கு அவர்கள் சிறைச்சாலையில் உள்ள திடலில் விடப்பட்டு மாலை வரை திறந்த வெளியில் பொழுதைக் கழிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

காலையில் யோகா பயிற்சியிலும் அவர்கள் ஈடுபடுவார்கள்.

கைதிகளில் ஏழு பேர் ஒன்றாகச் சேர்ந்துகொண்டு சதித்திட்டம் போட்டு சிறைச்சாலை அதிகாரிகளிடம் பிரச்சினையைக் கிளப்பினர்.

அதையடுத்து அவர்களில் இரண்டு பேரை வேறு இடத்திற்கு அதிகாரிகள் மாற்றினர்.

வியாழக்கிழமை திடீரென சிறைச்சாலை அதிகாரிகளை எதிர்த்தனர். அப்போது இருதரப்பினருக்கும் இடையில் பிரச்சினை ஏற்பட்டு சில கைதிகள் அதிகாரிகளைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

ரத்தம் வடிந்த நிலையில் அதிகாரிகள் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். இதர அதிகாரிகள் விரைந்து சென்று சூழ்நிலையைக் கட்டுப்படுத்தினர்.

அந்த நேரத்தில் திடீரென ஏழு கைதிகள் மரங்களில் ஏறிக்கொண்டு கைகளை அறுத்துக்கொண்டார்கள். இதற்கெல்லாம் அதிகாரிகள்தான் காரணம் என்று மிரட்டினார்கள். பிறகு சமரசமாகப் பேசி அவர்களை வழிக்குக் கொண்டு வந்த அதிகாரிகள் சிகிச்சைக்காக சிறைச்சாலை மருத்துவமனையில் அவர்களை அனுமதித்தனர்.

அந்த ஏழு பேரும் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டு இருப்பதாகவும் நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here