கோலாலம்பூர்:
வரவிருக்கும் நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலுக்கான பாகாத்தான் ஹரப்பான் தேர்தல் அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ள ‘செனவாங் – கிள்ளான் துறைமுக மாற்று இரயில் பாதை’ (Senawang–Port Klang bypass) திட்டம், அம்மாநிலத்தின் தெற்குப் பகுதியின் பொருளாதார வளர்ச்சிக்குப் புதிய தூண்டுகோளாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொழில்துறை மண்டலங்களுக்கும் துறைமுகத்திற்கும் இடையிலான இணைப்பை வலுப்படுத்தும் இத்திட்டம், சரக்குப் போக்குவரத்தை மேம்படுத்துவதோடு பயண நேரத்தையும் வெகுவாகக் குறைக்கும் எனப் போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் தெரிவித்துள்ளார்.
சாலை வழியிலான சரக்குப் போக்குவரத்தைப் படிப்படியாக இரயில் பாதைக்கு மாற்றும் அமைச்சைச் சேர்ந்த கொள்கைக்கு ஏற்ப இத்திட்டம் அமையும் என்றும், நெகிரி செம்பிலானை ஒரு தொழில்துறை மாநிலமாக உருமாற்றும் நோக்கில் அடுத்தக்கட்ட மேம்பாட்டுத் திட்டத்தில் இது சேர்க்கப்படும் என்றும் அவர் கூறினார்.
மாநிலத்தின் ஐந்து முக்கிய வாக்குறுதிகளில் ஒன்றாக அறிவிக்கப்பட்டுள்ள இத்திட்டத்துடன், புதிய போர்ட் டிக்சன் அனைத்துலக துறைமுகம், பண்டார் என்ஸ்டெக்கில் புதிய மருத்துவமனை மற்றும் சிரம்பான் – கோலாலம்பூர் இடையிலான இரயில் சேவைகளை அதிகரிப்பது உள்ளிட்ட திட்டங்களும் இடம்பெற்றுள்ளன.





















