கோலாலம்பூர்:
மலாய்-முஸ்லிம் ‘உம்மா ஒற்றுமை’ என்ற பெயரில் பெரிக்காத்தான் நேஷனல் (PN) கூட்டணியால், பாரிசான் நேஷனல் (BN) விழுங்கப்படலாம் என பக்காத்தான் ஹரப்பான் தேர்தல் இயக்குநர் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி (Amirudin Shari) எச்சரித்துள்ளார்.

பாஸ் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் ஹாடி அவாங் விடுத்துள்ள ஒற்றுமைக் கோரிக்கைக்குப் பதிலளித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், கடந்த காலங்களில் PAS மற்றும் UMNO கட்சிகளுக்கு இடையே மேற்கொள்ளப்பட்ட அனைத்து முயற்சிகளும் படுதோல்வியில் முடிந்ததைச் சுட்டிக்காட்டினார்.

“உம்மா ஒற்றுமை அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்த்துவிடும் என்றால், கிளாந்தான், திரெங்கானு, கெடா மற்றும் பெர்லிஸ் மக்கள் டோக்கியோ அல்லது துபாய் மக்களைப் போலச் செல்வ செழிப்புடன் வாழ்ந்திருக்க வேண்டும்” என்று அவர் சாடினார்.

இதற்கிடையே, நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலில் BN மற்றும் PAS இடையே தேர்தல் உடன்பாடு எட்டப்பட்டுள்ள போதிலும், கூட்டணிக் கட்சிகள் தங்களுக்குள் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.




















