மலேசியாவில் நள்ளிரவில் சினிமா பாணி துரத்தல்: போலிஸ் ரோந்து வாகனத்தை மோதிவிட்டு தப்பியோட முயன்ற 2 பேர் கைது!

கோலாலம்பூர்:

ஶ்ரீ டாமன்சாராவில் (Sri Damansara) இருந்து கோம்பாக் (Gombak) வரை காவல்துறையினரால் அதிரடியாகத் துரத்திச் செல்லப்பட்டு, 50 வயதுக்கு மேற்பட்ட இரு உள்ளூர் ஆண்கள் நள்ளிரவில் கைது செய்யப்பட்டனர்.

நேற்று வெள்ளிக்கிழமை (ஜூலை 24) இரவு சுமார் 11.57 மணியளவில், ஶ்ரீ டாமன்சரா, பெர்சியாரான் டாகாங் பகுதியில் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் சந்தேகத்திற்கு இடமான வாகனம் ஒன்றை நிறுத்துமாறு சுட்டிக்காட்டினர். ஆனால், அந்த வாகனம் நிற்காமல் வேகமாகத் தப்பியோடியது என்று, பெட்டாலிங் ஜெயா மாவட்டப் போலீஸ் தலைவர் அசிஸ்டண்ட் கமிஷனர் ஷம்சுதீன் மாமட் கூறினார்.

காவல்துறையினரின் சோதனையில் இருந்து தப்பிக்க அந்த வாகனம் பல பகுதிகள் வழியாக மிகவும் அபாயகரமான முறையில் இயக்கப்பட்டது. இறுதியில் அதிகாரிகள் அந்த வாகனத்தைக் கோம்பாக், ஜாலான் சுங்கை புசு (Jalan Sungai Pusu) பகுதியில் மடக்கிப் பிடித்தனர்.

காவல்துறையினர் அவர்களைக் கைது செய்ய முயன்றபோது, காரை ஓட்டிய நபர் போலிஸ் ரோந்து வாகனத்தின் மீது காரைப் பின்னோக்கி (Reverse) மோதியதுடன், மீண்டும் அதிவேகமாகத் தப்பிக்க முயன்று சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த மேலும் இரண்டு கார்கள் மீது மோதி விபத்துக்குள்ளாக்கினார்.

சம்பவ இடத்தில் வைத்து காரை ஓட்டிச் சென்ற நபரையும், உடன் இருந்த பயணியையும் போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். பின்னணிச் சோதனையில், கைது செய்யப்பட்ட இருவர் மீதும் ஏற்கனவே பல குற்றப் பின்னணிகள் (Criminal records) இருப்பது தெரியவந்துள்ளது.

இந்த வழக்கு தண்டனைச் சட்டம் பிரிவு 186 (அரசு ஊழியரின் பணியைத் தடுத்தல்) மற்றும் பிரிவு 279 (ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டுதல்) ஆகியவற்றின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது.

பொதுமக்கள் இது குறித்துச் சமூக வலைதளங்களில் தேவையில்லாத ஊகங்களையோ அல்லது உறுதிப்படுத்தப்படாத தகவல்களையோ பரப்ப வேண்டாம் என்றும், இச்சம்பவம் தொடர்பாகத் தகவல் தெரிந்தவர்கள் பெட்டாலிங் ஜெயா மாவட்டக் காவல் நிலைய செயல்பாட்டு அறையை (03-79662222) தொடர்புகொள்ளுமாறும் காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here