இணைய மோசடி குற்றங்களுக்கு மரண தண்டனை: மியன்மார் நாடாளுமன்றம் அதிரடி ஒப்புதல்!

நேப்பிடா:

பொதுமக்களைக் கட்டாயப்படுத்தி இணைய மோசடி மையங்களில் (Online Scam Centres) வேலை செய்ய வைப்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் ‘இணைய மோசடித் தடுப்பு மசோதாவிற்கு’ (Anti-Online Scam Bill) மியன்மார் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

இன்று (செவ்வாய்க்கிழமை, ஜூலை 28) தலைநகர் நேப்பிடாவில் நடைபெற்ற நாடாளுமன்றக் கூட்டத்தில் இச்சட்டம் நிறைவேற்றப்பட்டதாக அவைத்தலைவர் ஆங் லின் த்வே தெரிவித்தார்.

புதிய சட்டத்தின் கடுமையான தண்டனைகள்:

இணைய மோசடிகளுக்காக மக்களைத் துன்புறுத்துதல், கடத்துதல் அல்லது சட்டவிரோதமாக அடைத்து வைத்தல் போன்ற குற்றங்களுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை முதல் ஆயுள் தண்டனை வரை விதிக்கப்படும்.

இத்தகைய சித்திரவதைகள் மற்றும் கட்டாய வேலைகளால் பாதிக்கப்பட்டவர் உயிரிழக்க நேரிட்டால், குற்றவாளிகளுக்குக் கட்டாய மரண தண்டனை விதிக்கப்படும்.

ஆன்லைன் மோசடி மையங்களை நடத்துபவர்கள் மற்றும் கிரிப்டோகரன்சி (Cryptocurrency) மோசடிகளில் ஈடுபடுபவர்களுக்கு அதிகபட்சமாக ஆயுள் தண்டனை வழங்கப்படும்.

உள்நாட்டுப் போரினால் பாதிக்கப்பட்ட மியன்மாரில், காதல் மோசடி (Love Scams) மற்றும் போலி முதலீட்டு மோசடிகள் மூலம் உலகளாவிய பயனர்களை ஏமாற்றும் பல பில்லியன் டாலர் மதிப்புள்ள கள்ளச்சந்தை கும்பல்கள் இயங்கி வருகின்றன. வெளிநாட்டினரைக் கடத்தி வந்து, இத்தகைய மையங்களில் அடைத்து வைத்துச் சித்திரவதை செய்வதாகப் பல புகார்கள் எழுந்துள்ளன.

2021-ஆம் ஆண்டு ஆட்சிக் கவிழ்ப்பிற்குப் பிறகு, ராணுவத் தலைவர் மின் ஆங் லைங் தலைமையிலான அரசாங்கம் நிறைவேற்றியுள்ள முதல் சட்டம் இதுவாகும். உள்நாட்டுப் போரால் நாட்டின் மீது ஏற்பட்டுள்ள மோசமான பிம்பத்தைச் சீரமைக்கவும், சர்வதேசக் குற்றக் கும்பல்களைக் கட்டுப்படுத்தவுமே மியன்மார் அரசு இக்கடுமையான சட்டத்தைக் கொண்டுவந்துள்ளதாக அரசியல் கவனிப்பாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here