ஈப்போவிலுள்ள ஒரு வீட்டில் தாய் மற்றும் இரு மகள்கள் சடலமாக மீட்பு!

கோலாலம்பூர்:

ஈப்போ, பண்டார் பாரு தம்பூன் (Bandar Baru Tambun) பகுதியில் உள்ள வீடு ஒன்றின் படுக்கையறையில் 46 வயதுப் பெண்ணும் அவரது 12 மற்றும் 11 வயதுடைய இரு மகள்களும் நேற்று இரவு சடலமாக மீட்கப்பட்டனர்.

அவர்கள் உயிரிழந்த அறையிலிருந்து எரிக்கப்பட்ட கரிக்கட்டைகளின் எச்சங்கள் கொண்ட கலன் (container of burnt charcoal) ஒன்றையும் காவல் துறையினர் கண்டெடுத்துள்ளதாக, ஈப்போ மாவட்டக் காவல் துறைத் தலைவர் அசிஸ்டெண்ட் கமிஷனர் முகமட் நஜீப் அம்சா இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

நேற்று இரவு 9:10 மணியளவில் காவல் துறைக்கு இச்சம்பவம் குறித்துத் தகவல் கிடைத்தது என்றும், தடயவியல் நிபுணர்கள் மற்றும் உடற்கூறு ஆய்வாளர்களின் முதற்கட்டப் பரிசோதனையில், உயிரிழந்தவர்களின் உடல்களில் எவ்விதக் காயங்களோ அல்லது குற்றவியல் சம்பவத்திற்கான அறிகுறிகளோ கண்டறியப்படவில்லை என்று அவர் சொன்னார்.

இச்சம்பவம் ‘திடீர் மரணம்’ என வகைப்படுத்தப்பட்டு, உயிரிழப்பிற்கான சரியான காரணத்தைக் கண்டறியத் தொடர் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

உயிரிழந்த மூவரின் உடல்களும் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. ஆய்வுகளின் முடிவிலேயே மரணத்திற்கான முழுமையான காரணம் தெரியவரும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here