கோலாலம்பூர்:
வங்கி முன் பாதுகாப்பு அதிகாரியைக் மிரட்டி அவரிடமிருந்த துப்பாக்கியைப் பறித்துச் சென்ற குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ள 24 வயது இளைஞர், இன்று கிள்ளான் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றத்தை மறுத்து விசாரணை கோரியுள்ளார்.
அகமட் சுக்ரி சுஹைரின் என்ற அந்த இளைஞர் மீது, கடந்த ஜூலை 20-ஆம் தேதி மாலை 5:45 மணியளவில் பண்டார் புகிட் திங்கியிலுள்ள ஒரு வங்கிக்கு வெளியே, 51 வயதுமிக்கப் பாதுகாப்பு அதிகாரியை அச்சுறுத்தி அவருக்குச் சொந்தமான ‘பம்ப் கன்’ துப்பாக்கியைப் பறித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
குற்றவியல் தண்டனைச் சட்டத்தின் (Penal Code) பிரிவு 392-இன் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 14 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, அபராதம் அல்லது பிரம்படி விதிக்கப்பட வாய்ப்புள்ளது.
இவ்வழக்கின் மறுவிசாரணை செப்டம்பர் 14-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை 20-ஆம் தேதி பண்டார் புகிட் திங்கியில் உள்ள வங்கிக்கு பணத்தை மாற்றிக்கொண்டு இருந்தபோது சுமார் RM82,000 பணத்தைக் கொள்ளையடிக்க முயன்ற திட்டத்தைச் சாதுரியமாகச் செயல்பட்டுப் பாதுகாப்புப் ஊழியர் ஒருவர் முறியடித்திருந்தார்.
சிலாங்கூர் மாநிலக் காவல் துறைத் தலைவர் டத்தோ ஷாஸெலி கஹார் தெரிவித்த தகவலின்படி, துப்பாக்கியுடன் தன் பக்கமாக வந்த நபரைக் கண்ட பாதுகாப்பு அதிகாரி, கணப்பொழுதில் யோசித்து பணப் பையை உடனடியாகப் பாதுகாப்பு வாகனத்திற்குள் தூக்கி வீசி அதன் கதவை இறுக மூடி அசம்பாவிதத்தைத் தடுத்தது குறிப்பிடத்தக்கது.
























