பினாங்கு கடையில் இடிபாடு: கரையான்கள் அரிப்பால் ஏற்பட்ட விபத்தில் இரு இலங்கைச் சுற்றுலாப் பயணிகள் காயம்!

ஜார்ஜ் டவுன்:

பினாங்கின் புகழ்பெற்ற ‘அர்மீனியன் ஸ்ட்ரீட்’ (Lebuh Armenian) பாரம்பரியக் கட்டடத்தின் மரத்தூண் மற்றும் கான்கிரீட் சிதிலங்கள் கீழே விழுந்ததில், அவ்வழியாக நடந்து சென்ற இலங்கையைச் சேர்ந்த இரண்டு சுற்றுலாப் பயணிகள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று பிற்பகல் 1:11 மணியளவில் நிகழ்ந்த விபத்தில், கட்டடத்தின் முதல் தளத்தில் இருந்த கரையான்கள் அரித்த மரத்தூண், கான்கிரீட் பாகங்களும் இடிந்து விழுந்ததில் 66 வயது ஆடவரும், 55 வயது பெண்ணும் காயமடைந்தனர். அவர்கள் நாளை மீண்டும் இலங்கைக்குத் திரும்பத் திட்டமிட்டிருந்த நிலையில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

மாநில உள்ளாட்சி மன்றத் தலைவர் ஜேசன் ஹெங் (Jason H’ng) நடத்திய ஆய்வில், பாரம்பரியக் கட்டடத்தின் மராத்தூன்கள் கரையான்கள் அரித்துச் சேதமடைந்திருந்ததே இந்த இடிபாட்டிற்குக் காரணம் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பூச்சிக்கட்டுப்பாட்டு நடவடிக்கை: பாரம்பரியப் பகுதி தனியார் கட்டடங்களைக் கொண்டிருந்தாலும், இது முக்கியமான சுற்றுலாத் தலமாக விளங்குவதால், பினாங்கு தீவு மாநகராட்சி (MBPP) மூலமாக அப்பகுதியில் கரையான்களைக் கட்டுப்படுத்தும் சிறப்பு நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பாரம்பரியக் கட்டடங்களின் உரிமையாளர்கள் தங்களது சொத்துகளை முறையாக பராமரிக்க வேண்டும் என்றும், கட்டடங்களின் பாதுகாப்பை உறுதி செய்யத் தகுதிவாய்ந்த பொறியாளர்கள் அல்லது கட்டிடக் ஆய்வாளர்களைக் கொண்டு அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். காயமடைந்த சுற்றுலாப் பயணிகள் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், அப்பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here