கோலாலம்பூர்:
மலேசியாவின் பல்வேறு முக்கியத் துறைகளில் நிலவி வரும் தீவிரத் தொழிலாளர் பற்றாக்குறைக்கு உடனடித் தீர்வு காணும் வகையில், முதற்கட்டமாக 15,000 வெளிநாட்டுத் தொழிலாளர்களின் விண்ணப்பங்களை விரைந்து பரிசீலித்து நடவடிக்கை எடுக்குமாறு மனிதவள அமைச்சுக்கு (KESUMA) பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உத்தரவிட்டுள்ளார்.
இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய அரசாங்கப் செய்தித் தொடர்பாளரும் தொடர்புத்துறை அமைச்சருமான டத்தோ ஸ்ரீ ஃபாஹ்மி ஃபாட்ஸில், நாட்டின் பொருளாதார வளர்ச்சியை சீராகத் தக்கவைக்கவும், தொழில்துறைத் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் பிரதமர் இந்த அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளதாகத் தெரிவித்தார்.
நாட்டின் முக்கியச் சேவை மற்றும் உற்பத்திக் துறைகளில் ஏற்பட்டுள்ள ஆள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்து, வணிகச் செயல்பாடுகள் முடங்காமல் இருப்பதை உறுதிசெய்யவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டுத் தொழிலாளர்கள் நிர்வாகத்திற்கான ‘ஒரே மையப் பிரிவு’ (One-Stop Centre – OSC) முழுப் பொறுப்பையும் மனிதவள அமைச்சே ஏற்றுக்கொண்டுள்ள நிலையில், விண்ணப்பங்களை மிகவும் வெளிப்படையாகவும் வேகமாகவும் பரிசீலிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த ஜூலை 24 அன்று இந்திய முஸ்லிம் உணவகத் துறையைப் (Nasi Kandar / Mamak) பாதித்துள்ள கடுமையான தொழிலாளர் பற்றாக்குறைப் பிரச்சினைக்கு ஒரு மாத காலத்திற்குள் தீர்வு காணுமாறு சம்பந்தப்பட்ட அமைச்சுகளுக்குப் பிரதமர் கெடு விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.























