கோலாலம்பூர்:
“காிக்பிட் (Cockpit) கதவு மூடப்பட்டுவிட்டால், நாங்கள் இருவருமே மற்ற எந்தவொரு விமானப் பணியாளர்களைப் போலவும் எங்கள் கடமையை முழு தொழில்முறையுடன் (Professionally) நிறைவேற்றுவோம்” – இவ்வாறு பெருமிதத்துடன் கூறுகிறார் 30 ஆண்டுகால அனுபவம் மிக்க விமானி கப்டன் ரசாலி அப்துல் அஜிஸ் (53).
மலேசியாவின் பாட்டிக் ஏர் நிறுவனத்தில் பணிபுரியும் இவர், கடந்த திங்கள்கிழமை நடைபெற்ற கோலாலம்பூர் – கொழும்பு – கோலாலம்பூர் (OD297/298) விமானப் பயணத்தின் போது, தனது மூத்த மகளான பாத்தின் தாயினி (Fatin Dayini, 26) உடன் இணை விமானியாகச் (Co-pilot) செயல்பட்டு ஒரே காிக்பிட்டைப் பகிர்ந்துகொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
“என் சொந்த மகளுடன் ஒரே காிக்பிட்டில் பணியாற்றியது பெருமையாகவும், நெகிழ்ச்சியாகவும், அதே வேளையில் சற்று விசித்திரமான உணர்வாகவும் இருந்தது. ஆனால், பயணிகள் பாதுகாப்பு மற்றும் சௌகரியத்தை மட்டுமே முதன்மையாகக் கொண்டு நாங்கள் எங்கள் உணர்ச்சிகளை ஒதுக்கி வைத்துவிட்டுக் கடமையைச் செய்தோம்.”
1996-இல் ஆஸ்திரேலியாவின் ‘Tamworth Australian Air Academy’-இல் டிப்ளமோ மற்றும் வணிக விமானி உரிமம் (ATPL) பெற்ற ரசாலி, கடந்த முப்பது ஆண்டுகளில் 18,500 மணி நேரத்திற்கும் மேலாகப் பறந்த அனுபவம் கொண்டவர். தற்போது அவர் ‘போயிங் 737’ ரக விமானங்களை இயக்கி வருகிறார்.
பாத்தின் தாயினி பள்ளிப் பருவத்தில் (MRSM Trolak & Taiping) படிக்கும் போதே, தந்தையின் பணிப் பையை எடுத்துப் பார்த்து விமானத் துறை குறித்த தகவல்களை ஆர்வத்துடன் கேட்பார் எனக் கூறுகிறார் ரசாலி.
இந்த விமானப் பயணத்தின் போது, தனது மகள் எவ்வித அச்சமுமின்றி மிகவும் நம்பிக்கையுடன் விமானத்தை டேக்-ஆஃப் (Take-off) செய்யவும் தரையிறக்கவும் (Landing) வழிகாட்டிய தருணமே தனது வாழ்நாளின் மிகச் சிறந்த திருப்திகரமான தருணம் என்று அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
























