2 வயதுக் குழந்தை நீரில் மூழ்கிப் பலியான விவகாரம்: இந்தோனேசியப் பணிப்பெண்ணுக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை!

கோலாலம்பூர்:

தான் பராமரித்து வந்த 2 வயது ஆண் குழந்தையைப் நீச்சல் குளத்தில் தனியாக விட்டுச் சென்றதால் அக்குழந்தை நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவத்தில், 44 வயதான இந்தோனேசியப் பணிப்பெண் வாஹ்யுனி தஞ்சோங் என்பவருக்குச் செஷன்ஸ் நீதிமன்றம் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.

நீதிபதி சுஹைலா ஹாருன் முன்னிலையில் குற்றவாளி தன் மீதான குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, அவர் கைது செய்யப்பட்ட ஜூலை 29, 2026 முதலே இச்சிறைத் தண்டனை தொடங்கும் என உத்தரவிடப்பட்டது.

கடந்த ஜூலை 28 அன்று மாலை 6:00 மணி முதல் 7:00 மணிக்குள் செந்தூல் பகுதியில் உள்ள குடியிருப்பு வளாகத்தின் நீச்சல் குளத்தில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

பாதிக்கப்பட்ட குழந்தையையும் அவனது 5 வயது சகோதரனையும் நீச்சல் குளத்திற்கு அழைத்துச் சென்ற பணிப்பெண், இருவருக்கும் நீச்சல் தெரியாது மற்றும் பாதுகாப்புக் மிதவைப் பொருட்கள் ஏதும் இல்லை எனத் தெரிந்தும், அவர்களைக் பெரியவர்களுக்கான நீச்சல் குளத்தில் தனியாக விட்டுவிட்டு கழிப்பறைக்குச் சென்றுள்ளார்.

குழந்தை நீரில் மூழ்கியதைக் கண்டு பொதுமக்கள் முதலுதவி (CPR) அளித்த போதிலும், செலயாங் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்ட அக்குழந்தை மறுநாள் அதிகாலை 4:00 மணிக்குச் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

விசாரணையில், குற்றவாளி அக்குடும்பத்தில் பணிக்குச் சேர்ந்து ஒரு மாதம் மட்டுமே ஆகியிருந்தது தெரியவந்தது. இக்குற்றம் 2001-ஆம் ஆண்டு குழந்தைகள் சட்டத்தின் பிரிவு 31(1)(a) இன் கீழ் பதிவாகியுள்ளது.

குற்றவாளிக்குத் தன் தாய்நாட்டில் 16 வயதில் ஒரு மகன் இருப்பதாகக் கூறிய போதிலும், ஒரு பிஞ்சுக் குழந்தையின் உயிரைப் பறித்த அலட்சியப் போக்கைக் கருத்தில் கொண்டும், ஏனைய குழந்தைப் பராமரிப்பாளர்களுக்குப் பாடமாக அமையும் வகையிலும் அவருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

மேலும், தன் தண்டனையை இந்தோனேசியாவில் அனுபவிக்க குற்றவாளி கோரிக்கை விடுத்த நிலையில், குற்றம் மலேசியாவில் நடந்ததால் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here