கத்தாரில் ஆங்கிலப் போட்டியில் முதலிடம்; உலக இறுதிப் போட்டிக்கு வான் ஹாரிஸ் தகுதி

(கோகி கருணாநிதி)

ஜோகூர் பாரு:

கத்தார், தோஹாவில் நடைபெற்ற 2026ஆம் ஆண்டுக்கான அனைத்துலக ஆங்கில மொழித் திறன் போட்டியின் தகுதிச் சுற்றில் முதலிடம் பிடித்த ஜோகூர் மாணவர் வான் ஹாரிஸ் பின் வான் அப்துல் கய்யூம், வரும் அக்டோபரில் இத்தாலியில் நடைபெறவுள்ள உலக இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்று ஜோகூருக்கும் மலேசியாவுக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

ஜோகூர் பாரு, தாசேக் உத்தாரா ஆரம்பப்பள்ளியின் ஜோகூர் முன்னோடி பள்ளித் திட்டத்தின் 4 சபையர் வகுப்பு மாணவரான வான் ஹாரிஸ், கத்தாரில் நடைபெற்ற ‘ஹிப்போ இங்கிலீஷ் வித்அவுட் பார்டர்ஸ்’ போட்டியின் தகுதிச் சுற்றில் சிறப்பாகச் செயல்பட்டு முதலிடத்தைத் தட்டிச் சென்றார்.

6 முதல் 19 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்காக அனைத்துலக அளவில் நடத்தப்படும் இப்போட்டியில் 70க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 90,000க்கும் அதிகமான மாணவர்கள் பங்கேற்றுள்ளனர். ஐரோப்பிய மொழிகளுக்கான பொதுவான குறிப்பு கட்டமைப்பின் அடிப்படையில் நடைபெறும் இப்போட்டியில் வாசித்தல், எழுதுதல், கேட்டல், பேசுதல், இலக்கணம் ஆகிய ஆங்கில மொழித் திறன்கள் மதிப்பிடப்படுகின்றன.

தோஹாவில் நடைபெற்ற தகுதிச் சுற்றில் மொத்தம் 14 போட்டியாளர்கள் பங்கேற்றனர். இதில் மலேசியாவைச் சேர்ந்த இருவர் இடம்பெற்றனர். வான் ஹாரிஸ் முதலிடத்தைப் பிடித்த நிலையில், சவுதி அரேபிய மாணவர் இரண்டாவது இடத்தையும் கிர்கிஸ்தான் மாணவர் மூன்றாவது இடத்தையும் பெற்றனர்.

மலேசியாவின் மற்றொரு போட்டியாளரான ஜோகூர் பாரு இன்ஃபன்ட் ஜீசஸ் கான்வென்ட் பள்ளியைச் சேர்ந்த எஷாந்த் அஷ்விக் சஷிதாரா ஐந்தாவது இடத்தைப் பெற்றார். இருப்பினும் அவர் உலக இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெறவில்லை.

வான் ஹாரிஸின் சாதனை குறித்து வாழ்த்து தெரிவித்த ஜோகூர் கல்வி, தகவல் ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் நகிப் கசாலி, இந்த வெற்றி ஜோகூர் கல்வித் துறைக்கும் மாநிலத்திற்கும் பெருமை சேர்த்துள்ளதாகத் தெரிவித்தார்.

ஆங்கில மொழித் தேர்ச்சிக்கு முக்கியத்துவம் வழங்கும் ஜோகூர் முன்னோடி பள்ளித் திட்டத்தின் நோக்கத்துடன் வான் ஹாரிஸின் சாதனை ஒத்துப்போவதாக அவர் கூறினார். கல்வியில் சிறந்து விளங்குவதோடு தன்னம்பிக்கை, சிறந்த தொடர்புத் திறன், அனைத்துலக அரங்கில் போட்டியிடும் ஆற்றல் கொண்ட மாணவர்களை உருவாக்கும் மாநிலத்தின் கல்வி இலக்கையும் இச்சாதனை வலுப்படுத்துவதாக அவர் குறிப்பிட்டார்.

வான் ஹாரிஸின் வெற்றிக்குப் பின்னால் உறுதுணையாக இருந்த பெற்றோர், ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகத்தினருக்கும் டாக்டர் நகிப் தனது பாராட்டையும் நன்றியையும் தெரிவித்தார்.

போட்டிக்கு முன்னதாக உடல்நலக் குறைவு காரணமாக விமானப் பயணத்தை மாற்ற வேண்டிய நிலை, நீண்ட பயணத்தால் ஏற்பட்ட நேர வேறுபாடு, கடும் சோர்வு உள்ளிட்ட சவால்களை வான் ஹாரிஸ் எதிர்கொண்டதாக அவரது தாயார் தெரிவித்துள்ளார். இருப்பினும் மனம் தளராமல் தொடர்ந்து பயிற்சி மேற்கொண்டு அவர் இந்த வெற்றியைப் பெற்றதாகக் கூறினார்.

தோஹா வெற்றியைத் தொடர்ந்து வரும் அக்டோபர் மாதம் இத்தாலியின் ஸ்போலெட்டோ நகரில் நடைபெறும் உலக இறுதிச் சுற்றில் வான் ஹாரிஸ் பங்கேற்கவுள்ளார். அங்கும் சிறப்பாகச் செயல்பட்டு ஜோகூர், மலேசியாவின் பெயரை உலக அரங்கில் மேலும் உயர்த்த வேண்டும் என டாக்டர் நகிப் வாழ்த்து தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here