கிள்ளான் வணிக வளாகக் கட்டிடத்தில் பயங்கரத் தீ விபத்து: மாமா மற்றும் 8 வயது மருமகன் பரிதாபப் பலி!

ஷா ஆலம்:

கிள்ளான், தாமான் பாயு பெர்டானா பகுதியில் உள்ள மூன்று அடுக்கு வணிக வளாகக் கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் மாமாவும் அவரது 8 வயது மருமகனும் கழிப்பறைக்குள் சிக்கிப் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இருவர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

இன்று மாலை 5:51 மணியளவில் அவசர அழைப்பைப் பெற்ற போர்ட் கிள்ளான் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர், 8 நிமிடங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்ததாகச் சிலாங்கூர் தீயணைப்புத் துறை உதவி இயக்குநர் அஷ்ருல் ரிஸால் அஷ்பார் தெரிவித்துள்ளார்.

குறித்த வணிக வளாகக் கட்டிடத்தின் 2-ஆவது தளத்தில் தீப்பற்றியதில், அப்பகுதியின் 90 சதவீதத்திற்கும் அதிகமான பகுதிகள் சேதமடைந்தன.

தீக்கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட பிறகு நடத்தப்பட்ட சோதனையில், மாலை 6:33 மணியளவில் தனித்தனி கழிப்பறைகளில் சிக்கியிருந்த 66 வயது முதியவர் மற்றும் 8 வயது சிறுவனின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன.

பொதுமக்கள் உதவியுடன் மீட்கப்பட்ட இருவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அவர்கள் சிகிச்சைக்காகக் கிள்ளான் துங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனைக்கு (HTAR) அனுப்பி வைக்கப்பட்டனர்.

உயிரிழந்த இருவரின் சடலங்களும் இரவு 10:15 மணியளவில் காவல் துறையின் தடயவியல் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டன. விபத்துக்கான காரணத்தைக் கண்டறியத் தீயணைப்புத் துறையின் தடயவியல் குழு மற்றும் K9 நாய்ப்படை முதற்கட்ட விசாரணையை மேற்கொண்டு வருகின்றன. தெற்கு கிள்ளான் மாவட்டக் காவல் துறைத் தலைவர் உதவி ஆணையர் லிம் ஜிட் ஹுய் இச்சம்பவத்தை உறுதிப்படுத்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here