உலக ஹிப்போ போட்டிக்கு ரோஷன் குமார் தகுதி

(கோகி கருணாநிதி)

பத்து பகாட்:

அனைத்துலக அளவிலான எல்லைகளற்ற ஹிப்போ ஆங்கில மொழிப் போட்டியின் பிராந்திய பிளே-ஆஃப் தகுதிச் சுற்றில் ஹிப்போ 1 பிரிவில் முதலிடம் பிடித்த ரோஷன் குமார் சசிகுமார், இத்தாலியில் நடைபெறவுள்ள ஹிப்போ உலக சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் பங்கேற்கத் தகுதி பெற்றுள்ளதாக அவரது தாயார் டாக்டர் லாதா தெரிவித்தார்.

பத்து பகாட்டைச் சேர்ந்த தெமெங்கோங் இப்ராஹிம் பெங்காரம் தேசியப்பள்ளி மாணவரான ரோஷன் குமாரின் இந்தச் சாதனை, அவரது பள்ளிக்கும் ஜோகூர் மாநிலத்திற்கும் பெருமை சேர்த்துள்ளது.

இங்கிலாந்தின் பிரைட்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு இன்டர்நேஷனல் கல்லூரியில் நடைபெற்ற கோடைக்கால முகாமில் ரோஷன் குமார் பங்கேற்றார். அதைத் தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி அங்கு நடைபெற்ற ஹிப்போ பிராந்திய பிளே-ஆஃப் தகுதிச் சுற்றுத் தேர்விலும் அவர் கலந்து கொண்டதாக டாக்டர் லாதா கூறினார். பிரைட்டன் இப்போட்டிக்கான பிராந்திய பிளே-ஆஃப் தகுதிச் சுற்று மையங்களில் ஒன்றாகும்.

அத்தேர்வில் சிறப்பான ஆங்கில மொழித் திறனை வெளிப்படுத்திய ரோஷன் குமார், ஹிப்போ 1 பிரிவில் முதலிடத்தைப் பெற்று உலக சாம்பியன்ஷிப்பில் பங்கேற்கும் வாய்ப்பை உறுதி செய்தார். இதையடுத்து வரும் செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 1ஆம் தேதி வரை இத்தாலியின் ஸ்பொலெட்டோ நகரில் நடைபெறவுள்ள உலக சாம்பியன்ஷிப்பில் அவர் பங்கேற்கவுள்ளார்.

பிரைட்டனில் தனது போட்டி, கோடைக்கால முகாம் ஆகியவற்றை நிறைவு செய்த ரோஷன் குமார் குடும்பத்தினருடன் நேற்று இங்கிலாந்திலிருந்து புறப்பட்ட நிலையில், இன்று மலேசியா திரும்பவுள்ளதாகவும் டாக்டர் லாதா தெரிவித்தார்.

எல்லைகளற்ற ஹிப்போ ஆங்கில மொழிப் போட்டி என்பது 6 முதல் 19 வயதுடைய மாணவர்கள் தங்களின் ஆங்கில மொழித் திறனை அனைத்துலக அரங்கில் வெளிப்படுத்துவதற்கான உலகளாவிய போட்டியாகும்.

2013ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்போட்டி, இத்தாலியைச் சேர்ந்த குளோபல் ஹிப்போ அசோசியேஷன், பிரிட்டனைச் சேர்ந்த கேட்ஹவுஸ் அவார்ட்ஸ் ஆகிய அமைப்புகளால் நடத்தப்படுகிறது. மலேசியா, சிங்கப்பூரில் இப்போட்டியின் அதிகாரப்பூர்வ தேசிய ஒருங்கிணைப்பாளராக காயா அகாடமி செயல்படுகிறது.

இப்போட்டி தொடக்கச் சுற்று, தேசிய இறுதிச் சுற்று, தகுதிச் சுற்று, உலக இறுதிச் சுற்று எனப் பல கட்டங்களாக நடத்தப்படுகிறது. மொழிகளுக்கான பொதுவான ஐரோப்பியக் குறிப்புச் சட்டகத்தின் (சி.இ.எப்.ஆர்.) தரநிலைகளுக்கு ஏற்ப நடைபெறும் தேர்வுகளில் வாசித்தல், எழுதுதல், கேட்டல், பேசுதல், இலக்கணம், சொல்வளம் உள்ளிட்ட ஆங்கில மொழித் திறன்கள் மதிப்பிடப்படுகின்றன.

பிரைட்டனில் முதலிடம் பெற்று உலக அரங்கிற்குச் செல்லும் வாய்ப்பைப் பெற்றுள்ள ரோஷன் குமார், இத்தாலியில் நடைபெறும் உலக சாம்பியன்ஷிப்பிலும் சிறப்பாகச் செயல்பட்டு மலேசியாவுக்குப் பெருமை சேர்ப்பார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here