கோலாலம்பூர்:
கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் நடத்தப்பட்ட ‘Ops Taring Alpha 1’ அதிரடி நடவடிக்கையில், RM1.66 மில்லியன் மதிப்பிலான வரி செலுத்தப்படாத கடத்தல் சிகரெட்டுகளைக் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புக்கிட் அமான் உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்குத் துறையின் (KDNKA) காட்டுயிர் குற்றப்பிரிவு மற்றும் சிறப்புப் புலனாய்வுப் பிரிவின் (WCB/PSK) தளபதி டத்தோ முகமட் ஜாக்கி அஷார் வெளியிட்ட அறிக்கையில், தேசா பெட்டாலிங்கில் நடத்தப்பட்ட சோதனையில் 19 மற்றும் 30 வயதுடைய இரு ஆண்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் இருவரும் விநியோக லோரி ஓட்டுநராகவும், களஞ்சிய பொறுப்பாளராகவும் பணியாற்றி வந்ததுடன், முறையே 6 மற்றும் 9 மாதங்களாக இக்கடத்தல் கும்பலில் இயங்கி வந்துள்ளனர்.
நேற்று பிற்பகல் 12.00 மணி முதல் 1.30 மணி வரை நடத்தப்பட்ட இந்த நடவடிக்கையின் போது, சுபாங் ஜெயா, புத்ரா ஹாய்ஸ்ட்ஸில் (கடத்தல் சிகரெட்டுகளைத் தற்காலிகமாகச் சேமித்து வைக்கும் இடமாகச் செயல்பட்ட வளாகம் ஒன்றும் முற்றுகையிடப்பட்டது. அங்கிருந்து பல்வேறு பிராண்டுகளைச் சேர்ந்த 2,115 பெட்டி (Cartons) கடத்தல் சிகரெட்டுகள், 2 வாகனங்கள் மற்றும் 5 கைப்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
பறிமுதல் செய்யப்பட்ட சிகரெட்டுகளின் மதிப்பு RM1,499,852 ஆகும். பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் மற்றும் இதர பொருட்களைச் சேர்த்து மொத்தச் சொத்து மதிப்பு RM1,661,352 என மதிப்பிடப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் இருவர் மீதும் 1967-ஆம் ஆண்டு சுங்கச் சட்டத்தின் பிரிவு 135(1)(d)-இன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுத் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மேலும், நடப்பாண்டு ஜனவரி 1 முதல் இதுவரை நாடளாவிய ரீதியில் WCB/PSK பிரிவினால் 240 அதிரடி முற்றுகைகள் நடத்தப்பட்டு 413 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும், இதுவரை பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு RM314.19 மில்லியன் என்றும் டத்தோ முகமட் ஜாக்கி தெரிவித்தார்.
























