5 பிள்ளைகளின் தாய் மறைவுக்குப் பின் உடல் உறுப்பு தானம்: பினாங்கு மருத்துவமனை பச்சையொளியில் மிளிர்ந்து மரியாதை!

கோலாலம்பூர்:

சாலை விபத்தில் உயிரிழந்த 36 வயதுடைய 5 பிள்ளைகளின் தாயார் ஒருவர், தனது மறைவுக்குப் பின் உறுப்பு தானம் செய்ததை சிறப்பிக்கும் வகையில் பினாங்கு மருத்துவமனை பச்சை நிற விளக்குகளால் ஒளிரப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் 13 அன்று சாலை விபத்தில் உயிரிழந்த அந்தப் பெண்ணின் உறுப்பு தான விருப்பத்திற்கு அவரது குடும்பத்தினர் முழுச் சம்மதம் தெரிவித்து அதனை நிறைவேற்றியுள்ளனர்.

இச்சம்பவம் குறித்துப் பினாங்கு மாநிலச் சுகாதார துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “மறைந்த அந்தத் தாயின் உறுப்பு தானம், நோய்வாய்ப்பட்டு நம்பிக்கையுடன் காத்திருந்த பலரின் வாழ்வில் புதிய வெளிச்சத்தையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது.”அந்தக் குடும்பத்தின் தாராள மனப்பான்மையும் மனதிடமும் இனம், மத வேறுபாடின்றி அனைத்து மலேசியர்களுக்கும் சிறந்த முன்மாதிரியாகத் திகழ்கிறது,” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

உறுப்பு தானம் செய்ய விரும்புபவர்கள் இப்போது MySejahtera செயலி மூலமாக மிக எளிதாகத் தங்களை உறுப்பு தானக் கொடையாளராகப் பதிவு செய்து கொள்ள முடியும் என்றும், இதன் மூலம் காத்திருப்போர் பட்டியலில் உள்ள பலரின் உயிரைக் காப்பாற்ற முன்வர வேண்டும் என்றும் சுகாதாரத்துறை பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here