குடிநுழைவுத் துறை லோரி விபத்தில் பலியானவர்கள் ஓய்வுபெற்ற இராணுவ வீரர் மற்றும் அவரது மகள்கள்!

கோலாலம்பூர்:

கோலாலம்பூர், சுல்தான் இஸ்மாயில் சாலையிலுள்ள மாஜு ஜங்ஷன் போக்குவரத்துச் சந்திப்பில் குடிநுழைவுத் துறை (JIM) லோரி மோதிய விபத்தில் பலியான ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரின் அடையாளங்களை போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

உயிரிழந்தவர்கள் பேராக், காம்பாரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற இராணுவ வீரர் ஷேக் முகமட் ஃபிர்தாவுஸ் ஷேக் யஹ்யா (53) மற்றும் அவரது மகள்களான சித்தி நோர் சாஸ்லின் (25), சித்தி தார்விஷா ஆவினி (12) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

விபத்தில் பலத்த காயமடைந்த ஃபிர்தாவுஸின் மனைவி நோர்ஹயாதி ரசாலி (55), தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

தலைநகருக்குச் சுற்றுலா வந்த இக்குடும்பத்தின் மூத்த மகள் சித்தி நோர் ஷகீரா (28), இச்சுற்றுலாவில் கலந்துகொள்ளாததால் அதிர்ஷ்டவசமாக விபத்திலிருந்து தப்பினார்.

தேசிய தடயவியல் மருத்துவ நிறுவனத்தில் (IPFN) உடற்கூறாய்வுப் பரிசோதனைகள் நிறைவடைந்த பின்னர், மூவரின் உடல்களும் சொந்த ஊரான காம்பாருக்குக் கொண்டு செல்லப்பட்டு ‘கம்போங் ஆயிர் ஈத்தாம் லாபு’ இஸ்லாமிய மயானத்தில் அடக்கம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோலாலம்பூர் குடிநுழைவுத் துறை இயக்குநர் ஹம்ஷா இன்ஜாவ் IPFN வளாகத்திற்கு நேரில் வருகை தந்து, உயிரிழந்தவர்களின் உறவினர்களைச் சந்தித்துத் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டார்.

இன்று அதிகாலை 1 மணியளவில், குடிநுழைவுத் துறைக்குச் சொந்தமான ‘பிளாக் மரியா’ (Black Maria) லோரி அவசர எச்சரிக்கை விளக்கு மற்றும் சைரன் ஒலியுடன் சிவப்பு விளக்கு எரிந்த சந்திப்பிற்குள் நுழைந்தபோது, ‘புரோட்டான் சாகா’ கார் மீது மோதியது. இதில் கட்டுப்பாட்டை இழந்த லோரி, பாதசாரிகளாகச் சென்ற இக்குடும்பத்தினர் மீது பாய்ந்தது.

இச்சம்பவம் குறித்து 1987-ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் பிரிவு 41(1)-இன் கீழ் போலிசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here