KL மற்றும் கிள்ளானில் போலீஸ் அதிரடி சோதனை: RM12.8 மில்லியன் மதிப்பிலான கடத்தல் பொருட்கள் பறிமுதல்!

கோலாலம்பூர்:

கோலாலம்பூர் மற்றும் கிள்ளான் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட இரண்டு வெவ்வேறான கடத்தல் தடுப்பு நடவடிக்கைகளின் மூலம் 5 நபர்களைக் கைது செய்த போலிசார், RM12.8 மில்லியன் மதிப்பிலான கடத்தல் மற்றும் விதிமுறைகளை மீறி இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களைப் பறிமுதல் செய்துள்ளனர்.

கடந்த ஆகஸ்ட் 5 அன்று கோலாலம்பூரில் நடத்தப்பட்ட சோதனையில் ஒரு மலேசியர் மற்றும் இரு மியன்மார் குடிமக்கள் கைது செய்யப்பட்டனர். அங்கிருந்து சீனா நாட்டில் தயாரிக்கப்பட்ட RM5.1 மில்லியன் மதிப்பிலான பல்வேறு பிராண்ட் மதுபானங்கள் மற்றும் உணவுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன என்று,
புக்கிட் அமான் உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்குத் துறையின் (செயல்பாடுகள்) துணை இயக்குநர் டத்தோ முகமத் அப்துல் ஹலீம் கூறினார்.

கிள்ளானில் நடத்தப்பட்ட மற்றொரு நடவடிக்கையில் இரு ஆண்கள் கைது செய்யப்பட்டு RM7.7 மில்லியன் மதிப்பிலான பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இதில் RM2.1 மில்லியன் மதிப்பிலான சீன மதுபானங்கள், RM300,000 மதிப்பிலான சிகரெட்டுகள், RM1.8 மில்லியன் மதிப்பிலான ஹெல்மெட்கள் (Helmets), தொலைபேசி பாகங்கள், RM2.29 மில்லியன் மதிப்பிலான அழகுசாதனப் பொருட்கள் மற்றும் 260 போன்சாய் (Bonsai) மரங்கள் அடங்கும்.

கைப்பற்றப்பட்டப் பொருட்கள் போலி ஆவணங்கள் மூலம் துறைமுகங்கள் வழியாக நாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு, தற்காலிகச் சேமிப்புக் கிடங்குகளில் வைக்கப்பட்டு உள்ளூர் வாடிக்கையாளர்களுக்கு விநியோகிக்கப்பட்டு வந்துள்ளன. இக்கடத்தல் கும்பல் கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக இயங்கி வந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் இந்தாண்டு ஜனவரி முதல் ஆகஸ்ட் 21 வரை நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட 240 சோதனைகளில் 413 நபர்கள் கைது செய்யப்பட்டு, மொத்தம் RM315 மில்லியன் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here