கோலாலம்பூர்:
தமது பதவிக் காலத்தில் தயாரிக்கப்பட்ட 2017-ஆம் ஆண்டிற்கான கணக்காய்வாளர் அறிக்கையில் லம்பாகா தபுங் ஹாஜி (TH) அமைப்பில் நேரடித் திருட்டுச் சம்பவங்கள் எதுவும் நடந்ததற்கான சான்றுகள் கண்டறியப்படவில்லை என மலேசியாவின் முன்னாள் தலைமைத் தணிக்கை அதிகாரி தான்ஸ்ரீ டாக்டர் மதினா முகமட் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இன்று கோலாலம்பூரில் நடைபெற்ற ‘முஷாவரா தேசிய உச்சிமாநாடு 2.0’ மன்றத்தில் “உண்மை மற்றும் உணர்வுகள்: தபுங் ஹாஜியை அரசியலாக்காதீர்கள்” எனும் தலைப்பிலான கலந்துரையாடலில் பேசிய அவர் இத்தகவலைத் தெளிவுபடுத்தினார்.
“நான் தலைமைத் தணிக்கையாளராக இருந்தபோது தபுங் ஹாஜியில் திருட்டு நடந்ததற்கான எவ்வித சான்றுகளையும் பார்க்கவில்லை. ஒருவேளை எனக்கும் எனது குழுவிற்கும் அத்தகைய ஆதாரங்கள் கிடைத்திருந்தால், அதை மறைக்காமல் அதிகாரிகளிடம் முதல் ஆளாகச் சென்று புகாரளித்திருப்பேன்” என்றார்.
அறிக்கைகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்குவதற்கு முன், தணிக்கை நடவடிக்கைகள் அனைத்தும் தரநிலைகளுக்கு உட்பட்டும், தகுந்த ஆதாரங்களின் அடிப்படையிலுமே மேற்கொள்ளப்பட்டதாக அவர் உறுதியளித்தார்.
2014 முதல் 2017 வரையிலான தபுங் ஹாஜியின் நிதி அறிக்கைகளுக்கு நிபந்தனையற்ற தணிக்கை கருத்துக்கள் வழங்கப்பட்டது குறித்தும், தணிக்கை முடிவுகளின் பின்னணி குறித்தும் விளக்கமளிக்கத் தாம் தயார் நிலையில் இருந்ததாக மதினா கூறினார். RCI விசாரணைகள் நடைபெற்றபோது தாம் JAKIM அலுவலகத்தில் இருந்தபோதிலும், விசாரணைக்காகத் தம்முடைய பெயர் அழைக்கப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
2017 முதல் 2019 வரை தலைமைத் தணிக்கையாளராகப் பணியாற்றிய மதினா முகமட்டின் இந்த விளக்கம், தபுங் ஹாஜியின் நிதி அறிக்கைகள் தொடர்பில் தணிக்கைத் துறை உறுதியான நிலைப்பாட்டை எடுக்கவில்லை எனக் குற்றம் சாட்டிய 211 பக்க அரச விசாரணைக் குழுவின் (RCI) அறிக்கையைத் தொடர்ந்து வெளியாகியுள்ளது.























