69-ஆவது தேசிய தினக் கொண்டாட்டம்: மாமன்னரை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்திய பிரதமர் அன்வார் இப்ராஹிம்!

கோலாலம்பூர்:

நாளை நடைபெறவுள்ள மலேசியாவின் 69-ஆவது தேசிய தினக் கொண்டாட்டங்களை முன்னிட்டு, மலேசிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் அவர்களைப் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இஸ்தானா புக்கிட் துங்குவில் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

இச்சந்திப்பின் போது நாட்டின் தற்போதைய முக்கிய மாற்றங்கள், வளர்ச்சி திட்டங்கள் மற்றும் நாளை நடைபெறவுள்ள தேசிய தினக் கொண்டாட்டத்திற்கான இறுதி கட்ட ஏற்பாடுகள் குறித்தும் பிரதமரிடம் இருந்து மாமன்னர் கேட்டறிந்தார்.

இச்சந்திப்பு குறித்து மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் தமது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “தேசிய தினக் கொண்டாட்டங்கள் அனைத்தும் திட்டமிட்டபடி சிறப்பாகவும் அமைதியாகவும் நடைபெற வாழ்த்துகிறேன். நாட்டின் மிக முக்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த நிகழ்வில் பங்கேற்கும் அனைவரும் தங்களது சிறந்த பங்களிப்பை வழங்குவார்கள் என எதிர்பார்க்கிறேன்,” என்று குறிப்பிட்டுள்ளார்.

நாளை புத்ராஜெயா சுதந்திர சதுக்கத்தில் நடைபெறவுள்ள தேசிய தினக் கொண்டாட்டப் பேரணியில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள், தேசியப் பாதுகாப்புப் படையினரின் நவீன உபகரண அணிவகுப்புகள் மற்றும் வண்ணமயமான கலை நிகழ்ச்சிகள் இடம்பெறவுள்ளன.

இந்த ஆண்டு தேசிய தினக் கொண்டாட்டமானது “மலேசியா மடானி: செழிப்பின் பயன்களை அனுபவித்தல்” (Malaysia Madani: Kesejahteraan Dinikmati) என்ற கருப்பொருளின் கீழ், தேசப்பற்றை வளர்க்கும் வகையிலும், நாட்டின் கலாச்சாரம் மற்றும் சுதந்திர வரலாற்றைப் பறைசாற்றும் வகையிலும் மிகக் கோலாகலமாக நடைபெறவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here