25 நாடுகளில் கொரோனா பரிசோதனை கருவி

இந்திய மருந்து தயாரிப்பு நிறுவனமான சிப்லா 25 நாடுகளில் கொரோனா பரிசோதனை கருவிகளை விநியோகம் செய்ய திட்டமிட்டுள்ளது. அதற்காக, பெல்ஜியத்தைச் சேர்ந்த மல்டி-ஜி என்கிற நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.

இதன் மூலம் குறிப்பிட்ட ஆண்டிபாடி டெஸ்ட் கிட்டினை ஐரோப்பிய நாடுகளில் விநியோகம் செய்வதற்கு சிப்லா திட்டமிட்டுள்ளது. இந்த ஒப்பந்தம், சிப்லா நிறுவனத்தின் கொரோனா தடுப்பு பரிசோதனை மருந்துகள் மற்றும் கருவிகளை, மருத்துவ உதவி தேவைப்படும் இடங்களுக்கு கொண்டு செல்வதற்கான முயற்சி என சிப்லா நிறுவனம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக மல்டி-ஜி நிறுவனம் தயாரிக்கும் ராபிட் ஆன்டிபாடி கிட்டினை சிப்லா நிறுவனம் விநியோகம் செய்வதற்கும் இந்த ஒப்பந்தம் வகை செய்கிறது. சிப்லா நிறுவனம் இதற்கு முன் 20 நாடுகளில் கொரோனா பரிசோதனை  சிகிச்சை கருவிகளை விநியோகம் செய்து வருகிறது.

மல்டி-ஜி நிறுவனத்தின் பரிசோதனைக் கருவி கோவிட்-ஜி என்கிற பெயரில் சந்தையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த இரண்டு நிறுவனத்துக்கிடையிலான ஒப்பந்தம் மூலம், ஆசிய சந்தைகள், மத்திய கிழக்கு, வட அமெரிக்கா, லத்தீன் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட 25 நாடுகளில் கொரோனா தடுப்பு கருவி விநியோகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக சிப்லா குறிப்பிட்டுள்ளது.