முதன்முறையாக மனிதர்களுக்குப் பறவைக் காய்ச்சல் தடுப்பூசி: பின்லாந்து

ஹெல்சிங்கி:

பின்லாந்து, விலங்குகளுடன் தொடர்பில் இருக்கும் ஊழியர்கள் சிலருக்கு பறவைக் காய்ச்சலுக்கு எதிரான தடுப்பூசியை வழங்கவுள்ளது.

அந்நாட்டில் அடுத்த வாரமே பறவைக் காய்ச்சல் தடுப்பூசிகள் மனிதர்களுக்கு வழங்கப்படலாம் என்று நேற்று (ஜூன் 25) அதிகாரிகள் தெரிவித்தனர்.

மனிதர்களுக்குப் பறவைக் காய்ச்சல் தடுப்பூசிகளை வழங்கும் முதல் நாடு என்ற பெருமை பின்லாந்தைச் சேரும்.

10,000 பேருக்கான தடுப்பூசிகளை பின்லாந்து வாங்கியிருக்கிறது. ஒவ்வொருவருக்கும் இருமுறை தடுப்பூசி போடப்படும்.

ஐரோப்பிய ஒன்றியம், 15 நாடுகளுக்காக 40 மில்லியன் வரையிலான பறவைக் காய்ச்சல் தடுப்பூசிகளுக்கு CSL செக்கிரஸ் நிறுவனத்திடம் விண்ணப்பித்துள்ளது. அவற்றில் பின்லாந்து வாங்கியுள்ள தடுப்பூசிகள் அடங்கும்.

பின்லாந்து, இந்தத் தடுப்பூசியை வழங்கும் முதல் நாடாகும் என்று ஆஸ்திரேலிய நிறுவனமான சிஎஸ்எல் செக்கிரஸ் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் அளித்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

“வேலை, மற்ற காரணங்களால் பறவைக் காய்ச்சல் பரவக்கூடிய அபாயம் கூடுதலாக இருக்கும் 18 வயது அல்லது அதையும் தாண்டியோருக்கு தடுப்பூசி வழங்கப்படும்,” என்று அறிக்கை ஒன்றில் பின்லாந்து சுகாதார, நலன்புரிக் கழகம் குறிப்பிட்டது.

அண்மைய ஆண்டுகளில் H1N1 ரக பறவைக் காய்ச்சல் கிருமித்தொற்றுக்கு ஆளான பல பண்ணைப் பறவைகள் கொல்லப்பட்டுள்ளன அல்லது அவற்றைக் கொல்லவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. H1N1 பாலூட்டிகளுக்கும் அதிகமாகப் பரவி வருகிறது. பாதிக்கப்பட்ட பாலூட்டிகளில் அமெரிக்காவில் கிருமித்தொற்றுக்கு உள்ளான மாடுகளும் அடங்கும்.

சில மனிதர்களும் H1N1 தொற்றுக்கு ஆளாகியிருக்கின்றனர்.

பின்லாந்தில் இதுவரை மனிதர்கள் யாரும் பறவைக் காய்ச்சலுக்கு ஆளாகவில்லை என்று அந்நாட்டு சுகாதார, நலன் கழகம் குறிப்பிட்டது. எனினும், அங்குள்ள ‘ஃபர் ஃபார்ம்ஸ்’ என்றழைக்கப்படும் தோலுக்காக வளர்க்கப்படும் விலங்குகளுக்கான பண்ணைகளால் கிருமித்தொற்று ஏற்படும் அச்சம் நிலவுகிறது.

அதனைத் தொடர்ந்து பறவைக் காய்ச்சல் தடுப்பூசிகளை மனிதர்களுக்கு வழங்க பின்லாந்து எண்ணம் கொண்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here