பூச்சோங் கிள்ளான் ஆற்றில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்பு – போலீசார் விசாரணை

கோலாலம்பூர்,

பூச்சோங், ஜாலான் ஜுருதேரா அருகிலுள்ள கிள்ளான் ஆற்றுப் பாலத்தின் கீழ், அடையாளம் தெரியாத பெண்ணொருவரின் சடலம் குப்புறக் கிடப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த தகவல், பொதுமக்களிடமிருந்து நேற்று காலை 11.58 மணியளவில் காவல்துறைக்கு கிடைத்ததாக சுபாங் ஜெயா மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி வான் அஸ்லான் வான் மாமாட் இன்று தெரிவித்தார்.

அதன் அடிப்படையில், சம்பவ இடத்துக்கு போலீசார் உடனடியாக அனுப்பப்பட்டனர். கருப்பு நிற உடையை அணிந்த நிலையில் இருந்த அந்த பெண்ணின் அருகில் எந்தவிதமான அடையாள ஆவணங்களோ தனிப்பட்ட உடைமைகளோ காணப்படவில்லை.

சிலாங்கூர் போலீஸ் தலைமையகத்திலிருந்து வந்த தடயவியல் நிபுணர்கள் விசாரணை மேற்கொண்டதில் அந்த பெண் சுமார் 24 மணி நேரத்திற்கும் மேலாக ஆற்றில் இருந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. இந்தச் சம்பவம் தற்போது திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது.

மரணத்திற்கான காரணத்தைத் துல்லியமாகக் கண்டறியும் நோக்கில், அந்த பெண்ணின் சடலம் செர்டாங் மருத்துவமனையின் தடயவியல் துறைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக ஏசிபி வான் அஸ்லான் மேலும் தெரிவித்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக ஏதேனும் தகவல் தெரிந்தவர்கள் அல்லது தங்கள் குடும்ப உறுப்பினர்களில் யாராவது காணாமல் போயிருக்கின்றனர் எனக் கருதுபவர்கள், விசாரணை அதிகாரி இன்ஸ்பெக்டர் கே. விக்னேஸ்வரனை 014-922 9233 என்ற எண்ணில் அல்லது அருகிலுள்ள காவல் நிலையத்தை தொடர்பு கொள்ளுமாறு போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here