பெட்டாலிங் ஜெயா, ஆக. 22 –
மலேசியாவில் கல்லூரி மாணவி கொலை செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் வழக்கில், காவல்துறையினர் இதுவரை 30 பேரிடமிருந்து வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளனர்.
சுபாங் ஜெயாவில் அமைந்துள்ள தனது குடும்ப வீட்டில், கடந்த வாரம் மாணவி கொல்லப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பாக அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் சம்பவத்தை நேரில் கண்டவர்கள் உள்ளிட்டோரிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளன என்று பெர்னாமா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
விசாரணையை முடிக்க, மேலும் சில முக்கிய நபர்களிடமிருந்து வாக்குமூலங்கள் பெறப்படும் என பெட்டாலிங் ஜெயா துணை காவல்துறை ஆணையர் அஸ்லான் பின் மமாட் தெரிவித்தார்.
“சம்பவத்தை நேரில் கண்டிருக்கக்கூடிய பலரை அடையாளம் காணும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது,” என்று அவர் வெள்ளிக்கிழமை (ஆக. 22) காவல்துறை தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.
20 வயதிற்கு மேற்பட்ட அந்த மாணவி, ஆகஸ்ட் 14ஆம் தேதி வீட்டின் இரண்டாவது மாடி நடைபாதையில் உள்ள மின்விசிறியில் தொங்கிய நிலையில் அவரது தந்தையால் கண்டுபிடிக்கப்பட்டார்.
செர்டாங் மருத்துவமனையில் நடைபெற்ற பிரேதப் பரிசோதனையில், மாணவியின் மரணம் ஹையாய்ட் எலும்பைச் சுற்றிய இரத்தக் கசிவு காரணமாக ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டது. மேலும், தசைகள் மற்றும் எலும்புகளில் கண்டறியப்பட்ட காயங்கள், கழுத்தை நெரித்ததால் ஏற்பட்டவை என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தனது சகோதரி உள்ளிட்ட உறவினர்களுடன் வசித்து வந்த அந்த மாணவி, சம்பவம் நிகழ்ந்த நேரத்தில் வீட்டில் தனியாக இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது, கொலை வழக்காக விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.





















