மராங் கடலில் படகு கவிழ்ந்ததில் திருமணமான தம்பதியினர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

மாராங்:

மீன்பிடிக்க கடலுக்குச் சென்ற தம்பதியினர், அவர்கள் பயணம் செய்த ஃபைபர்கிளாஸ் படகு கவிழ்ந்ததில் மூழ்கி உயிரிழந்தனர்.

இறந்தவர்கள் கம்போங் புலாவ் கெரெங்காவைச் சேர்ந்த அப்துல் ரஹீம் முஸ்தஃபா (47) மற்றும் அவரது மனைவி நோர்ஹஸ்ரியா சே ஒஸ்மான் (46) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களை உள்ளூர் மீனவர்கள் கண்டுபிடித்ததாக மாராங் காவல்துறைத் தலைவர் கண்காணிப்பாளர் முகமட் சோபியான் ரெட்சுவான் தெரிவித்தார்.

அவரது கூறுகையில், நோர்ஹஸ்ரியாவின் உடல் மாலை 4.30 மணியளவில் கோலா மெர்ச்சாங்கிற்கு அருகிலுள்ள கடலில் கண்டுபிடிக்கப்பட்டது. சுமார் 15 நிமிடங்களுக்குப் பிறகு அவரது கணவர் அப்துல் ரஹீமின் உடலும் அங்கிருந்தே மீட்கப்பட்டது.

“சுமார் 20 அடி நீளமுள்ள படகு, பலத்த அலைகள் மற்றும் காற்று காரணமாக கவிழ்ந்ததாக நம்பப்படுகிறது. முதற்கட்ட விசாரணைகளின்படி, தம்பதியினர் இன்று காலை 7.45 மணியளவில் கடலுக்குச் சென்றுள்ளனர். மோசமான அலைகளின் காரணமாக படகு கட்டுப்பாட்டை இழந்தபோது இந்த விபத்து நடந்திருக்கலாம்,” என்று சோபியான் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், கடந்த வியாழக்கிழமை முதல் அந்தப் பகுதியில் கடல் கொந்தளிப்பான நிலையில் இருந்ததாகவும், பலத்த காற்றுடன் கடும் அலைகள் ஏற்பட்டதாகவும் வானிலை அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

“இத்தகைய சம்பவங்களைத் தவிர்க்க, கடலுக்குச் செல்லும் முன் மீனவர்களும் பொதுமக்களும் வானிலை முன்னறிவிப்புகளை கவனமாகப் பின்பற்ற வேண்டும்,” என்று போலீசார் அறிவுறுத்தினர்.

உயிரிழந்த தம்பதியினர் இருவரின் உடல்களும், பிரேத பரிசோதனைக்காக கோலா திரெங்கானுவிலுள்ள சுல்தானா நூர் ஜாஹிரா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here