கோலாலம்பூர்:
தலைநகரின் இரவு நேர அழகை மேம்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள “I Lite U” (Innovative Lighting Infrastructure Towards Eco-elegance Urbanisation) திட்டத்தின் தொடக்க விழாவிற்காக புக்கிட் பிந்தாங் பகுதியில் முக்கிய சாலைகள் தற்காலிகமாக மூடப்படுகின்றன.
ஜாலான் சுல்தான் இஸ்மாயில் (Jalan Sultan Ismail) மற்றும் ஜாலான் புக்கிட் பிந்தாங் (Jalan Bukit Bintang) ஆகிய சாலைகள் இன்று ஜனவரி 3 (சனிக்கிழமை) காலை 8.00 மணி முதல் ஜனவரி 4 (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 3.00 மணி வரை மூடப்படும் என்று, கோலாலம்பூர் மாநகர மன்றம் (DBKL) தனது முகநூல் பக்கத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்த பிரம்மாண்ட விழாவை மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைக்கவுள்ளார். அத்தோடு ஆஸ்கார் விருது பெற்ற உலகப்புகழ் பெற்ற மலேசிய நடிகை டான் ஸ்ரீ மிஷெல் இயோ (Michelle Yeoh) இவ்விழாவில் பங்கேற்கவுள்ளார்.
இவ்விழாவை முன்னிட்டு புக்கிட் பிந்தாங்கைச் சுற்றி ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு நவீன LED விளக்குகள் மூலம் அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன. சுமார் 70-க்கும் மேற்பட்ட எனர்ஜி சேவிங் (Energy-efficient) விளக்குகள் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளன.




















