14 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை: தீயணைப்பு படை வீரர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

ஈப்போ:

14 வயது பள்ளி மாணவிக்கு எதிராக ஏழு முறை உடல் ரீதியான பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டது மற்றும் அவதூறான புகைப்படத்தை வைத்திருந்தது போன்ற குற்றச்சாட்டுகளுக்காக 28 வயது தீயணைப்பு படை வீரர் மீது இன்று செஷன்ஸ் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

முகமட் ஐடிலாபிபி முகமட் (Muhammad Aidilafifi Muhammad) என்ற அந்த நபர், நீதிபதி ஜீன் ஷர்மிளா ஜேசுதாசன் முன்னிலையில் வாசிக்கப்பட்ட அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் மறுத்து, விசாரணை கோரினார்.

தீயணைப்பு மற்றும் மீட்புப் படை கேடட் பிரிவின் பயிற்சியாளராகவும் பணியாற்றி வந்த இவர், பாரிட் (Parit) பகுதியில் உள்ள ஒரு விடுதிப் பள்ளி மாணவியிடம் தவறாக நடந்துகொண்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மாணவியைக் கட்டிப்பிடித்தது, முத்தமிட்டது மற்றும் அநாகரீகமான முறையில் மாணவியின் உடலைத் தொட்டது உள்ளிட்ட ஏழு குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளன.

கடந்த பிப்ரவரி தொடக்கம் முதல் மே 1-ஆம் தேதி வரை, ஸ்ரீ இஸ்கந்தரில் உள்ள ஒரு வணிக வளாகத்தின் வாகன நிறுத்துமிடம், பள்ளியின் விடுதிப் பகுதி மற்றும் ஒரு உணவகத்தின் முன்புறம் ஆகிய இடங்களில் இந்தச் சம்பவங்கள் நடந்ததாகக் கூறப்படுகிறது.

இந்தக் குற்றச்சாட்டுகள் 2017-ஆம் ஆண்டு குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் சட்டத்தின் பிரிவு 14(a)-ன் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. இச்சட்டத்தின் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால், 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் பிரம்படி வழங்கப்பட வாய்ப்புள்ளது.

மேலும், மே 3-ஆம் தேதி அவரது மொபைல் போனில் பாதிக்கப்பட்ட சிறுமியின் ஆபாசப் புகைப்படம் இருந்ததற்காக, அதே சட்டத்தின் பிரிவு 10-ன் கீழ் மற்றொரு குற்றச்சாட்டையும் அவர் எதிர்கொள்கிறார். இதற்காக 5 ஆண்டுகள் சிறை அல்லது 10,000 வெள்ளி வரை அபராதம் விதிக்கப்படலாம்.

அரசுத் தரப்பு வழக்கறிஞர் பிணையை (Bail) மறுத்த போதிலும், பிரதிவாதி தரப்பு வழக்கறிஞர் அகமது ஷாமில் ஆசாத் அப்துல் ஹமீத், தனது கட்சிக்காரர் ஒரு அரசு ஊழியர் என்பதையும், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கியதையும் சுட்டிக்காட்டி பிணை கோரினார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி:

அனைத்துக் குற்றச்சாட்டுகளுக்கும் சேர்த்து 9,000 ரிங்கிட் பிணைத் தொகை நிர்ணயித்தார்.

குற்றம் சாட்டப்பட்டவர் மாதந்தோறும் காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமி அல்லது அவரது குடும்பத்தினரைத் தொடர்பு கொள்ளத் தடை விதிக்கப்பட்டது.

இந்த வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணை (Mention) ஜூன் 23-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here