கோலாலம்பூர் சொகுசு ஹோட்டலில் போலீஸ் அதிரடி சோதனை: போதைப்பொருள் விருந்தில் ஈடுபட்ட 51 ஆண்கள் கைது!

கோலாலம்பூர்:

லைநகரில் உள்ள ஒரு பிரபல சொகுசு ஹோட்டலில் நடத்தப்பட்ட தொடர் சோதனைகளில், போதைப்பொருள் பயன்பாடு மற்றும் ஓரினச்சேர்க்கை விருந்தில் (Gay Party) ஈடுபட்டதாக மொத்தம் 51 ஆண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று அதிகாலை 2.35 மணி முதல் காலை 5 மணி வரை புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறையினரால் (NCID) இந்த அதிரடி சோதனைகள் நடத்தப்பட்டதாக அதன் இயக்குனர் டத்தோ ஸ்ரீ ஹுசைன் ஒமர் கான் தெரிவித்தார்.

21 முதல் 52 வயதுக்குட்பட்ட 23 உள்ளூர் ஆண்கள் மற்றும் 28 வெளிநாட்டு ஆண்கள் என மொத்தம் 51 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முதற்கட்ட சிறுநீர் பரிசோதனையில் 36 பேருக்கு போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டுள்ளது; 15 பேருக்கு நெகட்டிவ் என வந்துள்ளது. கைதானவர்களில் ஒருவருக்கு ஏற்கனவே போதைப்பொருள் தொடர்பான குற்றப் பின்னணி இருப்பது தெரியவந்துள்ளது.

சம்பவ இடத்திலிருந்து சுமார் 103,070 மலேசிய ரிங்கிட் மதிப்புள்ள பல்வேறு வகையான போதைப்பொருட்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்: அவற்றில் 1.15 கிலோகிராம் திரவ வடிவ எல்.எஸ்.டி/எம்.டி.எம்.ஏ (MDMA), 284 கிராம் எம்.டி.எம்.ஏ போதைப்பொருள் பவுடர், எக்ஸ்டசி மாத்திரைகள் (8.56 கிராம்) மற்றும் பவுடர் (8.7 கிராம்), கெட்டமைன் (11.61 கிராம்) என்பன அடங்கும்.

இந்தச் சோதனை நடப்பதற்கு முன்பாக, இந்த விருந்தில் கலந்துகொண்டதாக நம்பப்படும் நபர் ஒருவர் ஹோட்டல் வரவேற்பறையில் (Lobby) மயக்க நிலையில் மீட்கப்பட்டு, கோலாலம்பூர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.

இந்தக் குழுவினர் சொகுசு ஹோட்டல் அறைகளை போதைப்பொருள் உட்கொள்வதற்கும், ஒழுக்கக்கேடான செயல்களில் ஈடுபடுவதற்கும் பயன்படுத்தி வந்துள்ளதாகப் போலீசார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டுள்ள அனைவரும் விசாரணைக்கு உதவ 3 முதல் 6 நாட்கள் வரை தடுப்புக் காவலில் (Remand) வைக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து 1952-ஆம் ஆண்டு ஆபத்தான போதைப்பொருள் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here