கோலாலம்பூர்:
உலு லாங்காட், சுங்கை தெகாலியில் ரோஹிங்கியா சமூகத்தினரால் கட்டப்பட்டுள்ள சட்டவிரோத 4 அடுக்கு மாடி கட்டடம் தொடர்பாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (SPRM) உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மலேசிய ஊழல் கண்காணிப்பு அமைப்பு (MCW) வலியுறுத்தியுள்ளது.
முறையான கட்டட அனுமதி மற்றும் பாதுகாப்புச் சான்றிதழ்கள் இன்றி இவ்வளவு பெரிய கட்டடம் எப்படி நீண்ட காலமாக இயங்கி வருகிறது என்பது குறித்து அதன் தலைவர் ஜாய்ஸ் அப்துல் கரீம் கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் குடிநுழைவு துறையினரால் இங்கு நடத்தப்பட்ட கூட்டுச் சோதனையில் பல வெளிநாட்டினர் கைது செய்யப்பட்ட போதிலும், இந்த விவகாரம் இன்னும் முழுமையாகத் தீர்க்கப்படாதது வருத்தமளிப்பதாகக் குறிப்பிட்ட அவர், ஊராட்சி மன்றம், தீயணைப்பு, மீட்புத் இலாகாவும் இணைந்து இங்கு விரிவான தணிக்கையை நடத்த வேண்டும் என்று கோரியுள்ளார்.
நாட்டின் சட்ட ஒழுங்கை நிலைநாட்டவும், மக்கள் மத்தியில் அரசாங்க நிர்வாகத்தின் மீதான நம்பிக்கையை உறுதிப்படுத்தவும், இதில் ஏதேனும் ஊழல் அல்லது அதிகார துஷ்பிரயோகம் நடந்துள்ளதா என்பது குறித்து எஸ்பிஆர்எம் உடனடியாக நேரில் சென்று விசாரிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.





















