கோலாலம்பூர்:
சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள வணிக வளாகங்களில் (Shopping Malls) வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகை நடத்துவதற்கான முன்மொழிவுக்குச் சிலாங்கூர் சுல்தான், சுல்தான் ஷரஃபுடின் இட்ரிஸ் ஷா ஒப்புதல் அளிக்க மறுத்துவிட்டார் என்று சிலாங்கூர் இஸ்லாமிய சமயக் கவுன்சிலின் (MAIS) தலைவர் செனட்டர் டத்தோ சலேஹுடின் சைடின் தெரிவித்துள்ளார்.
கூட்டரசு பிரதேசங்களில் உள்ள சில வணிக வளாகங்களில் இத்தகைய தொழுகைகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததைத் தொடர்ந்து, பிற மாநிலங்களும் இதற்கு அனுமதிக்க வேண்டும் எனப் பிரதமர் துறை அமைச்சர் டத்தோ டாக்டர் சுல்கிஃப்லி ஹசான் அண்மையில் ஊக்கப்படுத்தியிருந்தார்.
இந்த நிலையில் சிலாங்கூர் சுல்தான் இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளார்.
இது குறித்து விளக்கிய MAIS தலைவர், “வணிக வளாகங்களில் ஜும்ஆ தொழுகையை அனுமதிப்பது, மசூதிகளை முதன்மை வழிபாட்டுத் தலங்களாக மேம்படுத்துவதற்கான முயற்சிகளைப் பாதிக்கும். மேலும், சிலாங்கூர் மாநிலத்தில் ஏற்கனவே 448 மசூதிகளும், 379 சூராக்களும் (Surau) பொதுமக்களுக்குப் போதுமான அளவில் உள்ளன” என்று சுட்டிக்காட்டினார்.
“வணிக வளாகங்கள் என்பவை வர்த்தகம் மற்றும் பொழுதுபோக்குடன் தொடர்புடைய இடங்களாகும். எனவே, புனிதமான ஜும்ஆ தொழுகையை மசூதிகளிலேயே நடத்துவதுதான் உசிதமானது. அதோடு, மயீஸால் அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்படும் இமாம் மற்றும் பிலால் இல்லாத பட்சத்தில், வணிக வளாகங்களில் ஓதப்படும் மத உரைகளைக் (Khutbah) கண்காணிப்பதும் கடினம்” என்றும் அவர் மேலும் தெளிவுபடுத்தினார்.




















