கோலாலம்பூர்:
கோலா திரெங்கானுவில் நடைபெற்ற அதிவேக மோட்டார் சைக்கிள் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுவிட்டுத் திரும்பிய 40 வயதுடைய பெண் சூப்பர்பைக் வீராங்கனை ஒருவர், நேற்றிரவு ஏற்பட்ட சாலை விபத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
நேற்று மாலை சுமார் 6.45 மணியளவில் ஜாலான் ஜம்பாத்தான் கோலா இபாய் (Jalan Jambatan Kuala Ibai) அருகே ‘அப்ரில்லா’ (Aprilia) ரக சூப்பர்பைக் விபத்துக்குள்ளானது குறித்துப் பொதுமக்களிடமிருந்து காவல்துறைக்குத் தகவல் கிடைத்ததாக கோலா திரெங்கானு மாவட்ட காவல்துறைத் தலைவர் அசிஸ்டண்ட் கமிஷனர் (ACP) அஸ்லி முகமட் நூர் தெரிவித்தார்.
முதற்கட்ட விசாரணையின்படி, சிலாங்கூர், பண்டார் பாரு சாலாக் திங்கியைச் சேர்ந்த அந்தப் பெண் ஓட்டி வந்த அதிவேக மோட்டார் சைக்கிள், கோலா நெருஸில் உள்ள கோங் பாடாக்கிலிருந்து டூங்குன் நோக்கிச் சென்று கொண்டிருந்தது.
அப்போது அந்தப் பாலத்தின் வளைவுப் பகுதியில் திரும்ப முயன்றபோது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் நடுவே இருந்த தடுப்புச்சுவரில் (Road Divider) பலமாக மோதியுள்ளது.
இந்த அதிவேக மோதலில் ஏற்பட்ட கடுமையான உடல் காயம் காரணமாக அந்தப் பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அவர் கோங் பாடாக்கில் நடைபெற்ற ‘சூப்பர்பைக் ஃபைட்டர் 2.0 2026’ (Superbike Fighter 2.0 2026) நிகழ்ச்சியில் கலந்துகொண்டுவிட்டு, டூங்குனில் உள்ள தனது தங்குமிடத்திற்கு (Homestay) திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த விபத்து நேரிட்டுள்ளதாக நம்பப்படுகிறது.
பலியானவரின் உடல் பிரேதப் பரிசோதனைக்காகச் சுல்தானா நூர் ஜாஹிரா மருத்துவமனையின் (HSNZ) தடயவியல் துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்துப் போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.



















