(கோகி கருணாநிதி)
ஜோகூர் பாரு:
ஜோகூர் மாநிலத் தேர்தலில் கிடைத்துள்ள மகத்தான வெற்றியைப் பதவிகளுக்கான வாய்ப்பாகப் பார்க்காமல், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு மக்களுக்குச் செய்ய வேண்டிய பணிகளுக்கான மிகப்பெரிய பொறுப்பாகக் கருத வேண்டும் என ஜோகூர் மாநில ம.இ.கா தலைவரும், கெமெலா சட்டமன்ற உறுப்பினரும் கி. ரவீன் குமார் வலியுறுத்தினார்.
பாரிசான் நேஷனல் வேட்பாளர்களுக்கு மக்கள் வழங்கியுள்ள ஆதரவு, அவர்கள் மீது வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையின் வெளிப்பாடாகும். அந்த நம்பிக்கையைத் தக்கவைத்துக் கொள்வதற்கு வெற்றி பெற்ற மக்கள் பிரதிநிதிகள் உடனடியாகக் களப்பணிக்குத் திரும்ப வேண்டும் என்றார் அவர்.
ஐந்து ஆண்டுகள் என்பது நீண்ட காலமாகத் தோன்றினாலும், அரசியல் வாழ்க்கையில் அது மிக விரைவாகக் கடந்துவிடும். எனவே, தேர்தல் வெற்றியின் மகிழ்ச்சியில் மட்டும் இருந்துவிடாமல், தொகுதி மக்களின் தேவைகள், குறைகள், எதிர்பார்ப்புகள் ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டியது அவசியம் என அவர் கூறினார்.
ஜோகூர் மாநிலத் தேர்தலில் 56 தொகுதிகளில் 48 இடங்களை பாரிசான் நேஷனல் கைப்பற்றியிருப்பது, தேர்தல் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட பிரசாரத்திற்கு மட்டும் கிடைத்த வெற்றி அல்ல. கடந்த நான்கு ஆண்டுகளில் மாநில அரசாங்கம் மேற்கொண்ட பணிகளுக்கு மக்கள் அளித்த மதிப்பீடாகவும் இந்தத் தேர்தல் முடிவைக் காண வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
மக்கள் இன்று அரசியல் நிலவரங்களை நன்கு அறிந்தவர்களாக உள்ளனர். ஒரு தேர்தலுக்கு முன்பாக வழங்கப்படும் வாக்குறுதிகளை மட்டும் அவர்கள் கவனிப்பதில்லை. ஆட்சியில் இருந்தவர்கள் கடந்த காலத்தில் எவ்வாறு செயல்பட்டார்கள் என்பதையும் அடிப்படையாகக் கொண்டே தங்களது முடிவை எடுக்கின்றனர். அந்த வகையில், முந்தைய மாநில நிர்வாகத்தின் செயல்பாடுகளுக்கு ஜோகூர் மக்கள் தெளிவான அங்கீகாரத்தை வழங்கியுள்ளனர் என்றார் அவர்.
இந்த வெற்றிக்குப் பின்னர் பாரிசான் நேஷனல் மக்கள் பிரதிநிதிகள் எந்தவொரு இனத்திற்கோ சமூகத்திற்கோ மட்டும் உரியவர்களாகச் செயல்படாமல், தங்களது தொகுதியில் வாழும் அனைத்து மக்களுக்கும் சமமான சேவையை வழங்க வேண்டும் எனவும் ரவீன் குமார் கேட்டுக் கொண்டார்.
இதனிடையே, புதிய ஜோகூர் மாநில ஆட்சிக்குழு தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், தமக்கென எந்தப் பதவியையும் எதிர்பார்த்துக் காத்திருக்கவில்லை எனத் தெரிவித்தார்.
கடந்த தவணையில் மாநில ஆட்சிக்குழு உறுப்பினராகப் பணியாற்றிய அனுபவம் தமக்கு இருந்தாலும், மீண்டும் அதே பொறுப்பில் அமர வேண்டும் என்பது தமது தனிப்பட்ட கோரிக்கை அல்ல. மாநில நிர்வாகத்தில் இந்திய சமூகத்தின் குரல் தொடர்ந்து இடம்பெற வேண்டும் என்பதே தமக்கு முக்கியமானது என அவர் தெரிவித்தார்.
இம்முறை ம.இ.கா. சார்பில் போட்டியிட்ட நான்கு வேட்பாளர்களுக்கும் மக்கள் வெற்றியை வழங்கியுள்ளனர். எனவே நாங்கள் நால்வரில் யாருக்கு மாநில ஆட்சிக்குழுவில் பணியாற்றும் வாய்ப்பு வழங்கப்பட்டாலும் அதனை வரவேற்பதாக அவர் கூறினார்.
ஆட்சிக்குழு நியமனம் தொடர்பான முடிவுகள் உரிய நடைமுறைகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் என்பதில் தமக்கு நம்பிக்கை இருப்பதாகக் கூறிய அவர், மந்திரி பெசார் டத்தோ ஓன் ஹஃபிஸ் காஸி மேற்கொள்ளும் முடிவை மதிப்பதாகவும் தெரிவித்தார்.
தமக்கு மீண்டும் பொறுப்பு வழங்கப்பட்டால் முழுத் திறனுடன் பணியாற்றத் தயாராக இருப்பதாகவும், வேறொருவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டால் தனது முந்தைய அனுபவத்தைப் பகிர்ந்து அவருக்குத் தேவையான ஒத்துழைப்பையும் வழிகாட்டுதலையும் வழங்கத் தயார் என்றும் ரவீன் குமார் கூறினார்.
ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற ஜோகூர் மாநிலத் தேர்தலில் பாரிசான் நேஷனல் 48 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ம.இ.கா. சார்பில் கெமெலா, பெர்லிங், புக்கிட் பத்து, காஹாங் ஆகிய நான்கு தொகுதிகளில் களமிறங்கிய வேட்பாளர்கள் அனைவரும் வெற்றி பெற்றனர்.
இதனைத் தொடர்ந்து, டத்தோ ஓன் ஹஃபிஸ் காஸி தொடர்ந்து இரண்டாவது தவணையாக ஜோகூர் மந்திரி பெசாராகப் பதவியேற்று புதிய மாநில அரசாங்கத்தை வழிநடத்துகிறார்.




















