Southern Shuttle ரயில் சேவை ஆகஸ்ட் 8 முதல் பாலோ வரை விரிவாக்கம்: KTMB அறிவிப்பு!

கோலாலம்பூர்:

லேசியத் தேசிய ரயில்வே நிறுவனமான KTMB, தனது சதர்ன் ஷட்டில் ரயில் சேவையை வரும் ஆகஸ்ட் 8-ஆம் தேதி முதல் ‘பாலோ – ஜேபி சென்ட்ரல் – பாலோ’ (Paloh-JB Sentral-Paloh) வழித்தடம் வரை விரிவாக்கம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.

போக்குவரத்து அமைச்சகத்தின் இந்த நடவடிக்கை, நகர்ப்புறச் சுற்றுப்புறப் பகுதிகளை கூலாய் மற்றும் ஜேபி சென்ட்ரல் போன்ற முக்கியப் பொருளாதார மையங்களுடன் நேரடியாக இணைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விரிவாக்கத்தின் மூலம் பாலோ, குளுவாங், ரெங்காம், லாயாங்-லாயாங், கூலாய், கெம்பாஸ் பாரு மற்றும் ஜேபி சென்ட்ரல் ஆகிய 7 நிலையங்கள் இணைக்கப்படும்.

மேலும் ” பாலோவிலிருந்து ஜேபி சென்ட்ரலுக்குச் சென்றடையச் சுமார் 120 நிமிடங்கள் (2 மணி நேரம்) பிடிக்கும் என்றும், ஒரு ரயிலில் சராசரியாக 400 பயணிகள் பயணிக்கும் வகையில், தினமும் இரு வழிகளிலும் தலா 5 சேவைகள் என மொத்தம் 10 தடவைகள் இயக்கப்படும்.

பாலோவிலிருந்து முதல் ரயில் காலை 3:55 மணிக்குப் புறப்பட்டு 5:52 மணிக்கு ஜேபி சென்ட்ரலை அடையும். மறுமார்க்கமாக ஜேபி சென்ட்ரலிலிருந்து கடைசி ரயில் இரவு 8:30 மணிக்குப் புறப்பட்டு 10:27 மணிக்கு பாலோவை அடையும். சிங்ப்பூர் எல்லை தாண்டி வேலைக்குச் செல்லும் தினசரிப் பயணிகளுக்கு இந்த நேர அட்டவணை பெரிதும் உதவும்.

புதிய மின்சார ரயில்கள் அறிமுகமாகும் வரை, பாலோ – ஜேபி சென்ட்ரல் வழித்தடத்திற்கான கட்டணம் RM15.30-லிருந்து சலுகைக் கட்டணமாக RM7.70 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 8 முதல் டிசம்பர் 31 வரை, 4 முதல் 6 வயதுடைய குழந்தைகள், 1 முதல் 6-ஆம் படிவம் வரையிலான மாணவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் (PwDs) ‘MyRailLife Pass’ மூலம் இலவசமாகப் பயணிக்கலாம்.

இந்த ரயில் சேவை விரிவாக்கமானது தொழிலாளர்களின் தடையற்ற போக்குவரத்திற்கும், அப்பகுதியின் பொருளாதார நடவடிக்கைகளுக்கும், முக்கியமாக ஜொகூர்-சிங்கப்பூர் சிறப்புப் பொருளாதார மண்டலத்தின் (JS-SEZ) வளர்ச்சிக்கும் பெருமளவில் துணையாக இருக்கும் எனக் எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here