பெர்னாட் ஷா சொன்ன 4 விரோதிகள்

மது முன்னோர்களும் அறிஞர்களும் சொன்ன ஒவ்வொரு கருத்தும் பொன்மொழிகளும் வாழ்க்கையின் வெற்றிக்கும், வாழ்க்கையின் ஒழுக்கத்திற்கும் அடிப்படை பண்புகளை கற்றுத் தரும் விதமாக அமைந்துள்ளது.

நாம் எல்லாம் நன்கு அறிந்த அயர்லாந்தைச் சேர்ந்த தத்துவ அறிஞரான பெர்னாட் ஷா அவர்கள் நாம் வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டுமானால் விலக்க வேண்டிய நான்கு விரோதிகளை இங்கு குறிப்பிடுகிறார். அவை என்ன தெரியுமா?

“பொறாமை ,பேராசை , கோபம், கடுஞ்சொல் இவை நான்கும் உன் விரோதிகள். நமக்கு எது தெரியுமோ அதைப்பற்றி மட்டும்தான் பேசுவது நல்லது. தெரியாததை பற்றி பேசினால் அவமானப்படுவது தவிர்க்க முடியாததாகி விடுகிறது. ஒழுக்கம் உனக்கு நீயே போதும் நல்ல பாதை  இதுதான் பெர்னாட்ஷா அவர்கள் சொன்ன நாம் மனதில் பதிய வேண்டிய பொன்மொழி.

இதில் உள்ள நான்கு விரோதிகளில் முதலாவது பொறாமை. பிறர் மீது பொறாமை கொண்டு செய்யப்படும் எந்த ஒரு செயலும் அல்லது பேசப்படும் வார்த்தையும் பூமராங் போல நம்மிடமே திரும்பி வந்து நம் நிம்மதியைக் கெடுக்கும். மனதில் பொறாமை இருந்து விட்டால் மனதில் எந்நேரமும் ஒருவித பதட்டமும் அதனால் செயல்களில் கவனமின்மையும் ஏற்பட்டு வெற்றிக்கு தடையாகும்.

இரண்டாவது பேராசை. இதற்கு பெர்னாட் ஷாவின் இந்த மொழியிலேயே பதிலும் உள்ளது. ஆம். நமக்கு எது தெரிகிறதோ அதைப் பற்றி மட்டும் பேசுவது நல்லது என்கிறார். அதையே இப்படிப் பாருங்கள். நமக்கு என்ன தெரியுமோ அதில் மட்டும் கவனம் செலுத்தினால் நல்லது. பேராசையுடன் தெரியாததில் காலை வைத்தால் நிச்சயம் நஷ்டம்தான்.

மூன்றாவது கோபம். எவ்வளவுதான் திறமைசாலியாக இருந்தாலும் கோபம் அதிகமிருந்து விட்டால் அவரின் திறமைகள் நாளடைவில் மதிப்பற்று மழுங்கி விடும். வரும் வாய்ப்புகளையும் கோபம் வரவிடாமல் செய்து விடும். அதற்காக கோபமே இருக்கக் கூடாதா? இருக்கலாம். தவறுகளைத் தட்டிக் கேட்கும் விதமான கோபமிருந்தால் மட்டுமே நல்லது. அதீத கோபம் வெற்றிக்கு முட்டுக்கட்டை ஆகும்.

நான்காவது கடுஞ்சொல். ஒருவர் பேசும் கடுஞ்சொல் காலத்திற்கும் வடுவாக மாறி உறவு நட்பு என அனைவரையும் விலக வைக்கும். இதமான வார்த்தைகளை பேசிப் பழகினால் எதிரிகளும் நட்பாகி உதவுவார்கள். “தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாது நாவினால் சுட்ட வடு” என அழகாக விளக்கியுள்ளாரே திருவள்ளுவர். வார்த்தைகளில் வேண்டும் கவனமும் மென்மையும். சாதனையாளர்களை கவனித்துப் பாருங்கள். கவனமாக வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்து பேசுவது தெரியும்.

இந்த நான்கு விரோதிகளையும் விலக்கிவிட்டு ஒழுக்கம் எனும் நல்ல பாதையில் சென்றால் நிச்சயம் வெற்றிதான்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here