கோலாலம்பூர்:
கோலாலம்பூர், ஜாலான் சுல்தான் இஸ்மாயில் பகுதியில் குடிநுழைவு துறைக்கு சொந்தமான லோரி மோதிய கோர விபத்தில் தந்தை மற்றும் இரு மகள்கள் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, உடனடியாக, முழுமையான விசாரணை நடத்தும்படி பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் குடிநுழைவு துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்த விபத்தில் சட்ட மீறலோ அல்லது அலட்சியமோ கண்டறியப்பட்டால், எந்தவொரு சமரசமுமின்றி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தமது முகநூல் பதிவில் அன்வார் எச்சரித்துள்ளதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குத் தமது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
மாஜு ஜங்ஷன் சந்திப்பில் அதிகாலை 1 மணியளவில் நிகழ்ந்த இந்தச் சோக விபத்தில் 53 வயது ஆடவர் அவரது 25, 12 வயதுடைய இரு மகள்களும் உயிரிழந்தனர், இதற்கிடையே பலத்த காயமடைந்த அவரது 55 வயது மனைவி கோலாலம்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாகக் குடிநுழைவு துறை லோரி ஓட்டுநர் மற்றும் புரோட்டான் சாகா கார் ஓட்டுநர் ஆகிய இருவரைக் காவல்துறையினர் கைது செய்துள்ள நிலையில், 1987-ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டம் பிரிவு 41(1) இன் கீழ் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.























