ஏன் இந்த இரட்டை வேடம் ?

பல்வேறு கடுங்குற்றங்களுக்காகப் பிறந்த நாடான இந்தியாவில் இருந்து தப்பி ஓடிவந்து இங்கு மலேசியாவில் ஒளிந்துகொண்டிருக்கும் சர்ச்சை குரிய சமயப் போதகர் டாக்டர் ஸாகிர் நாய்க்கைத் திருப்பி ஒப்படைக்கச் சொல்லி இந்தியா கேட்கவில்லை – கேட்டது என்று ஒரு பட்டிமன்றமே தற்போது நடந்து கொண்டிருக்கிறது.

இந்த வாதப் பிரதிவாதத்திற்கு அவசியமே இல்லை.பயங்கரவாத குற்றச்சாட்டடுகளைச் சுமந்துகொண்டிருக்கும் ஓர் ஆசாமியை நாட்டில் தங்க வைத்து எல்லாவித வசதிகளையும் சலுகைகளையும் கொடுத்திருப்பதே பெரும் தவறுதானே!

ஒரு குற்றவாளி என்று அவரின் சொந்த நாடே பிரகடனப்படுத்தி ஜாமீனே இல்லாத சட்டப்பிரிவின் கீழ் கைது வாரண்டைப் பிறப்பித்திருக்கும் நிலையில் மலேசியாவில் ஏன் இந்த ராஜ உபங்ரணை? அவரிடம் அப்படி என்ன சிறப்பைக் கண்டீர்கள்?

ரஷ்யாவில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, மலேசியப் பிரதமர் துன் டாக் டர் மகாதீரிடம் ஸாகிர் நாய்க்கைத் திருப்பி அனுப்பக் கோரியது பொய்யாகவே இருக்கட்டுமே? மோடி தம்மிடம் அப்படி எதுவும் கேட்கவில்லை என்று துன் மகாதீர் மறுதளித் திருப்பதை இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மறுத்திருப்பதும் பொய்யாகவே இருக்கட்டும்..!

யாருங்க இந்த ஸாகிர் நாய்க்? அவருக்கும் மலேசியாவுக்கும் என்னங்க சம்பந்தம்? இந்த நாட்டிற்காக அவர் செய்திருக்கும் தியாகங்கள்தாம் என்னங்க? தலையில் தூக்கி வைத்துக்கொண்டு ஆட வேண்டிய அவசியம் என்னங்க?

நன்கொடையாக வழங்கப்பட்ட கோடிக்கணக்கான பணத்தை உரிந்து சொந்தக் காரர்களின் வங்கிக்கணக்கில் போட்டது தப்பு இல்லையா?

பல கோடிகள் சம்பந்தப்பட்ட கள்ளப்பணப் பரிமாற்ற நடவடிக்கைகளில் சம்பந்தப்பட்டது, சட்டவிரோதமாகச் சொத்துகளை வாங்கிக் குவித்தது, தீவிரவாத – பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டது, சட்டத்திற்குப் புறம்பாக வங்கிக் கணக்கில் 11 கோடி வெள்ளிக்கு மேல் வைத்திருப்பது போன்ற ஸாகிர் நாய்க்கிற்கு எதிரான குற்றச்சாட்டுகள் பொய்யானவையா?

இப்படி தன் தலைக்கு மேல் கடுமையான குற்றங்களைச் சுமந்து கொண்டிருக்கும் ஸாகிர் நாய்க்கைத் திருப்பி அனுப்பச் சொல்லி 2018ஆம் ஆண்டு தொடக்கத்திலேயே இந்தியா கேட்டுவிட்டது.

நிலைமை இப்படி இருக்க கேட்டார்களா – கேட்கவில்லையா என்ற பேச்சுகளுக்கும் வாதங்களுக்கும் அவசியமே இல்லை. இது ஒன்றும் புதிய கோரிக்கை இல்லை.

மோடி பொய் சொல்கிறாரா? மகாதீர் பொய் சொல்கிறாரா? தகவல் ஊடகங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கின்ற நிலையில் உண்மை பொய்யாகிப்போனது.

இந்த அசிங்கம் எல்லாம் யாரால்? ஒரு சர்ச்சைக்குரிய ஆசாமியால்தான் என்பதை பக்காத்தான் ஹராப்பான் அரசங்கம் ஒப்புக்கொள்ள மறுப்பது ஏன்?

சொந்த நாடான இந்தியாவில் இவ்வளவு படுபாதகங்களைச் செய்திருக்கும் ஸாகிர் நாய்க்கிற்கு மலேசியாவில் விஐபி அந்தஸ்து. நாட்டில் செல்வாக்கு மிக்கவராக அவர் பார்க்கப்படுகிறார். தாங்குமா நாடு?

ஸாகிர் நாய்க்கால் தங்கள் நாட்டிற்கு ஆபத்து ஏற்படலாம் என்ற அச்சத்தில் பல இஸ்லாமிய நாடுகளே அவரை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றன. ஆனால், மலேசியா மட்டும் அவரைத் தலையில் தூக்கி வைத்துக்கொண்டு ஆடுவது ஏன்?

ஸாகிர் நாய்க்கிற்கு எதிராக 200க்கும் அதிகமான போலீஸ் புகார்கள் செய்யப்பட்டிருக்கின்றன. புலன் விசாரணைகளும் நடந்து கொண்டிருக்கின்றன.

ஆனால், துன் மகாதீர் போன்ற தலைவர்கள் ஸாகிர் நாய்க்கைப் பாதுகாத்து வருகின்ற நிலையில் இந்த போலீஸ் புகார்களுக்கும் புலன் விசாராணைகளுக்கும் அர்த்தமில்லையே! எந்தவித மான தாக்கங்களும் அவற்றில் இருக்காதே!

பொது இடங்களில் உரை நிகழ்த்தக்கூடாது என்று ஸாகிர் நாய்க்கிற்குத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அவர் எல்லா இடங்களுக்கும் சுதந்திரமாகப் போய் வரலாமாம்!

ஏன் இந்த இரட்டை வேடம்? கொடுக்கப்பட்டிருக்கும் பிஆர் எனப்படும் நிரந்தரக் குடியிருப்பு அந்தஸ்து நிபந்தனைகளை ஸாகிர் நாய்க் அப்பட்டமாக மீறியிருக்கின்ற நிலையில், அவரின் சுதந்திரத்திற்கு எவ்விதக் கட்டுப்பாடும் விதிக்கப்பட வில்லையே!

இந்நாட்டில் வாழும் முஸ்லிம் அல்லாதாரை இழிவுபடுத்தியிருக்கும் – அவதூறு செய்திருக்கும் ஸாகிர் நாய்க்கிற்கு அரசங்கம் கொடுத்து வரும் பாதுகாப்பு கூடியிருக்கிறதே தவிர எள்ளளவும் குறையவில்லையே!

– பி.ஆர் ராஜன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here