பிரகாசமான எதிர்காலத்தின் ஊற்றுக்கண் திவெட் – TVET

தொழில்நுட்ப மற்றும் தொழில்பயிற்சிக் கல்வி (திவெட்) மிகப் பிரகாசமான எதிர்காலத்தை உறுதி செய்கிறது. நாட்டின் திவெட் கல்வி முறையை ஜெர்மன் நாட்டின் திவெட் முறைக்கு ஈடாக மேம்படுத்துவதற்கு ஜெர்மனிய தொழிலதிபர்கள், கல்வியாளர்கள் ஆகியோருடன் இணைந்து பணியாற்றுவதற்குரிய திட்டங்களை மலேசிய கல்வி அமைச்சு முன்னெடுத்துள்ளது என்று அதன் அமைச்சர் டாக்டர் மஸ்லீ மாலிக் கூறினார்.

2019 தொடக்கம் மலேசிய கல்வி அமைச்சு திவெட் கல்வி முறையில் அதீத நாட்டம் கொண்டு அதன் மேம்பாட்டில் மிகுந்த அக்கறையுடன் செயல்பட்டு வருகிறது என்று அவர் சொன்னார். மலேசியாவில் திவெட் கல்வி முறை மிகச் சிறந்த எல்லையைத் தொடுவதற்கு ஜெர்மனி நிறைந்த உதவிகளையும் ஒத்துழைப்பையும் வழங்கி வருகிறது என்று டாக்டர் மஸ்லீ குறிப்பிட்டார்.

நாட்டில் திவெட் கல்வி கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கு மலேசிய தொழில் அதிபர்களும் பெரு நகரங்களின் தலைவர்களும் கல்வி அமைச்சோடு நேரடியாக கரம் கோத்து அதன் வெற்றிக்குப் பெரும் பங்காற்றி வருகின்றனர். திவெட் கல்வியை நம் மாணவர்களும் மலேசியர்களும் குறைத்து மதிப்பிட்டு விடக்கூடாது. அதன் உண்மைத் தன்மையைப் புரிந்துகொண்ட – அது தரக்கூடிய பொருளாதாரப் பலத்தைத் தெரிந்து கொண்ட பட்டதாரி மாணவர்கள் கூட தற்போது திவெட் கல்வியில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.

திவெட் நம் நாட்டின் கல்வி முறையில் ஒரு பகுதியாக விளங்குகிறது. இது ஓர் இறுதி வாய்ப்பு என்பதாக மலேசியர்களின் புரிதலாக இருக்கிறது. ஆனால், உலகில் ஒரு முன் னேற்றப் பாதையில் பீடுநடை போடுவதற்குரிய ஒரு சிறந்த வாய்ப்பு என்று டாக்டர் மஸ்லீ தெரிவித்தார்.

2020 பட்ஜெட்டில் கிட்டத்தட்ட 59 கோடி வெள்ளி ஒதுக்கப்பட்டிருப்பதன் மூலம் திவெட் கல்விக்கு மலேசிய கல்வி அமைச்சு எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது என்பது தெளிவுபடுத்தப்பட்டிருக்கிறது. திவெட் கல்வியை ஒரு தேசிய முன்னுரிமையாக அறிவிக்க வேண்டும் என்று தேசிய ஆசிரியர் தொழிற்சங்கம் (என்யுடிபி) பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமதுவைக் கேட்டுக் கொண்டிருப்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

நம்முடைய அண்டை நாடுகளுடன் ஒப்பிடுகையில் திவெட் கல்வியில் நாம் இன்னமும் ரொம்பவே பின்தங்கியிருக்கிறோம் என்று என்யுடிபி தெரிவித்தது. திறன் ஆற்றல் கொண்ட மனித வளத்தை உருவாக்குவதற்கு திவெட் கல்வி முறைதான் மிகச் சிறந்தது. பிரகாசமான எதிர்காலத்தைத் தரவல்லது. வரும் காலங்களில் திவெட் போன்று இதர திறன்கல்வி மேம்பாட்டில் கல்வி அமைச்சு அதீத கவனம் செலுத்தும் என்று டாக்டர் மஸ்லீ கூறினார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here