பேங்காக் –
தாய்லாந்து பேங்காக்கில் நடைபெற்று முடிந்த ஆசிய பனிச்சறுக்குப் போட்டியில் மலேசியாவைச் சேர்ந்த இளம் வீராங்கனை ஸ்ரீஅபிராமி, சங்கீதா ஆகியோர் தலா 5 தங்கத்தையும் சரண்யா 1 தங்கத்தையும் வென்று சாதனை படைத்திருக்கிறார்கள்.
கடந்த ஒரு வாரமாக பேங்காக்கில் நடந்த இப்போட்டியில் மலேசியா, தாய்லாந்து, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் நாடுகள் பங்கேற்றன. 77 கிளப்புகளை பிரதிநிதித்து 128 பேர் கலந்து கொண்டனர்.
மலேசியா சார்பில் 11-12 வயது பிரிவில் சங்கீதாவும் 14 முதல் 16 வயது பிரிவில் சரண்யாவும் 8 முதல் 10 வயது பிரிவில் ஸ்ரீஅபிராமியும் பங்கேற்றனர்.
இதில் சங்கீதா தான் பங்கேற்ற 5 போட்டிகளிலும் தங்கம் வென்று அசத்தினார். அதேசமயம், நாட்டில் புகழ்பெற்ற இளம் வீராங்கனை ஸ்ரீஅபிராமி சந்திரன் 5 தங்கம், 1 வெண்கலத்தை வென்று சாதனை படைத்தார்.
4 போட்டிகளில் பங்கேற்ற சரண்யா 1 தங்கம் 3 வெள்ளி, 1 வெண்கலத்தை வென்று அசத்தினர். ஒட்டுமொத்தத்தில் இப்போட்டியில் மலேசியா 11 தங்கம், 3 வெள்ளி, 2 வெண்கலத்தை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
வரும் 2026ஆம் ஆண்டில் சுவிட்சர்லாந்தில் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் பனிச்சறுக்கும் பிரிவில் பங்கேற்கத் தயாராகிக் கொண்டிருக்கும் ஸ்ரீஅபிராமி, சங்கீதா, சரண்யா ஆகியோர் நாட்டில் முன்னணி பனிச்சறுக்கு வீராங்கனைகளாக விளங்கிக் கொண்டிருக்கின்றனர்.
பல அனைத்துலகப் போட்டிகளில் பங்கேற்று தங்கங்களை வாரிகுவித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீஅபிராமி சந்திரன், கடந்தாண்டு இறுதியில் ரஷ்யாவில் ஒரு மாதம் பனிச்சறுக்கும் பயிற்சியை மேற்கொண்டார்.
ரஷ்யாவில் மேற்கொண்ட இந்த பயிற்சியால் ஸ்ரீஅபிராமி மேலும் தனது ஆற்றலை வளர்ந்துக் கொண்டிருக்கிறார் என்று அவரின் தந்தை சந்திரன் தெரிவித்தார்.