திட்டமிட்டபடி தைப்பூசம்: கொரோனா வைரஸ் கவலை வேண்டாம்

பத்துகேவ்ஸ் –

இவ்வாண்டு பத்துமலைத் திருத்தலத் தைப்பூச விழா எந்தவொரு தடையுமின்றி நடைபெறும். உலகத்தையே அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தொடர்பாக எழுந்துள்ள தைப்பூச நிலை குறித்து பக்தர்கள் யாரும் அச்சப்படத் தேவை யில்லை என்று கோலாலம்பூர் ஸ்ரீ மகாமாரியம்மன் கோவில் தேவஸ்தானத் தலைவர் டான்ஸ்ரீ ஆர். நடராஜா திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

பத்துமலைத் தைப்பூசத்திற்கு பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் குறிப்பாக சீன சு ற்றுப்பயணிகள் வருவதற்கு தேவஸ்தானம் தடைவிதிக்காது. திருமுருகக் கடவுளை தரிசிப்பதற்கும் தங்கள் நேர்த்திக்கடனைச் செலுத்துவதற்கும் பக்தர்களுக்குத் தடைவிதிக்க இயலாது என்று அவர் கூறினார்.

நேற்று பத்துமலைத் திருத்தலத்திலுள்ள தேவஸ்தான அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் இந்த விவரங்களை டான்ஸ்ரீ நடராஜா வெளியிட்டார்.
அரசாங்கம் இதுவரை எந்தவொரு தடைக்கான அறிவிப்பையும் வெளியிடவில்லை. பத்துமலைத் தைப்பூச விழா இந்துப் பக்தர்களின் அதிகாரப்பூர்வ விழா என்பதால் இங்கு வருவதற்கு யாருக்கும் தடையில்லை.

கொரோனா வைரஸ் நம் நாட்டையும் அச்சுறுத்திக் கொண்டிருப்பதால் அரசாங்கம் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தைப்பூச விழாவிற்கு வருகின்ற பக்தர்கள் தங்கள் சுகாதாரப் பாதுகாப்பைப் பேணுவது அவசியமாகும்.

பத்துமலைக்கு வருகின்ற பக்தர்களுக்கு முகக்கவசம் வழங்குவதற்கான ஏற்பாடுகளையும் தேவஸ்தானம் மேற்கொண்டு வருகிறது. அதேவேளையில் இவ்வாண்டு நடைபெறும் தைப்பூச விழாவில் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கூடுவதால் எந்தவொரு பிரச்சினையும் இருக்காது என்று நாங்கள் நம்புகின்றோம்.
பக்தர்கள் அனைவரும் தங்கள் உடல்நிலையைக் கருத்தில்கொண்டு அதற்கேற்ப நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்.

தேவஸ்தானம் ஆண்டுதோறும் பாதுகாப்புக்கும் சுகாதாரத்திற்கும் முக்கியத்துவம் வழங்கி வருவதால் 1,800க்கும் மேற்பட்ட மருத்துவ உதவியாளர்கள் தயார் நிலையில் வைக்கப்படுவர்.

எனவே, பத்துமலைத் தைப்பூசம் வெற்றிகரமாக நடைபெறுவதற்குப் பக்தர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென்று அவர் கேட்டுக்கொண்டார்.
நேற்று நடைபெற்ற இந்தச் செய்தியாளர்கள் கூட்டத்தின்போது கோம்பாக் மாவட்ட போலீஸ் நிலைய அதிகாரிகளும் கலந்துகொண்டு விளக்கம் அளித்த வேளையில் வரும் 6ஆம் தேதி வியாழக்கிழமை தலைநகர் துன் எச்.எஸ்.லீ சாலையில் உள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் கோவிலில் இருந்து ஒரு லட்சம் பக்தர்கள் புடைசுழ இரவு 10 மணிக்கு வெள்ளி ரதம் புறப்படும் என்றார்.

வெள்ளி ரதத்தின் முன்னும் பின்னும் பக்தர்கள் பால்குடம் ஏந்தி வருவதோடு சாலைகளின் இருமருங்கிலும் காவல்துறை அதிகாரிகள் பணியில் ஈடுபடுவர். வெள்ளி ரதத்தில் முன் பின் வருபவர்கள் கட்டுக்கோப்பையும் ஒழுங்கையும் கடைப்பிடிக்க வேண்டும்.

பால்குடம் ஏந்தி வரும் பெண் பக்தர்களுக்கு எதிராக இடையூறுகளை ஏற்படுத்தும் இளைஞர்கள் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் எச்சரித்தார்.

இவற்றை எல்லாம் கருத்தில்கொண்டு நம் சமய விழாவில் கட்டுக்கோப்புடனும் கண்ணியத்துடனும் வெள்ளி ரத ஊர்வலம் இருக்க வேண்டும் என்று தேவஸ்தானம் பெரிதும் எதிர்பார்க்கின்றது.

மாலை 4 மணி அளவில் பத்துமலைத் திருத்தலத்தை வெள்ளி ரதம் வந்தடைந்த பின்னர் மாலை 5.30 மணிக்கு திருமுருகப் பெருமானின் சேவற்கொடி ஏற்றப்பட்டு தைப்பூச விழாவை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கிவைத்து தாம் உரையாற்றவிருப்பதாக டான்ஸ்ரீ நடராஜா கூறினார்.

ஜாலான் ஈப்போ 4ஆவது மைலில் எம்ஆர்டி ரயில் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன் காரணமாக வெள்ளி ரதம் வேறு பாதைகளில் செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here