2015 ஆம் ஆண்டு ஐக்கிய நாட்டு சபை அறிவித்த சர்வதேச நிலையான மேம்பாட்டு இலக்குகள் (Sustainable Development Goals) வரிசையில்‘தரமான கல்வி’ எனும் நான்காவது இலக்கை மையமாக கொண்டு இத்திட்டம் இரண்டு கட்டமாக முன்னெடுக்கப்பட்டது.
முதற்கட்டமாக இத்திட்டம் கிந்தா செலாத்தான் மாவட்டத்திலுள்ள 9 தமிழ்ப்பள்ளிகளுக்கும் பத்தாங் பாடாங் மாவட்டத்தின் செண்டரியாங் பாரதி தமிழ்ப்பள்ளிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டது.
முதற்கட்ட திட்டத்திற்கு சர்வதேச அமைப்பான ‘இன்னர் வீல் கிளாப் ஆஃப் ஈப்போ’ நல்ஆதரவை வழங்கியது. 155 மாணவர்களுக்கான நூல் செலவை அது ஏற்றுக்கொண்டது. நூல்களை மாணவர்களிடத்தில் ஒப்படைக்கும் நிகழ்ச்சி கடந்த பிப்ரவரி மாதம் 5ஆம் தேதி கம்பார் தமிழ்ப்பள்ளியில் நடத்தப்பட்டது.
அந்நிகழ்ச்சியில் 10 பள்ளிக்கூடங்களை சேர்ந்த ஆசிரியர்களும் பள்ளிகளின் மாணவர்களும் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்களாக ‘இன்னர் வீல் கிளாப் ஆஃப் ஈப்போ’வின் தலைவர் திருமதி கேத்ரீன் தினகரன் மற்றும் அவர்தம் உறுப்பினர்களும் கலந்துகொண்டு மாணவர்களுக்கு நூல்களை எடுத்து வழங்கினர்.
இரண்டாம் கட்டமாக இத்திட்டம் முவாலிம் மாவட்டதிலுள்ள 8 தமிழ்ப்பள்ளிகளுக்கும் பத்தாங் பாடாங் மாவட்டத்தின் சுங்கை தமிழ்ப்பள்ளிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டது.
இத்திட்டத்திற்கு மருத்துவர் திரு.சிவாமுரளிதரன் முனியாண்டி அவர்கள் ஆதரவை வழங்கினர். 115 மாணவர்களுக்கான நூல் அன்பளிப்பு செலவை அவர் ஏற்றுக்கொண்டார்.
மாணவர்களுக்கு நூல் வழங்கும் நிகழ்ச்சி மார்ச் மாதம் 13ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளிகளின் பிரதிநிதியாக தலைமையாசிரியர்களும் துணைதலைமையாசிரியர்களும் ஆசிரியர்களும் கலந்துகொண்டனர்.
உடன் யூதார் விரிவுரையாளர் திரு.கங்காதுரை கணேசன், முவாலிம் மற்றும் பத்தாங் பாடாங் மாவட்டத் தமிழ்ப்பள்ளிகளின் தலைமையாசிரியர் மன்றத் தலைவர் திரு.பழனி மற்றும் துரோலாக் தமிழ்ப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் முன்னாள் தலைவர் திரு. கிருஷ்ணன் பெருமாள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
தலைமையாசிரியர் மனத்தின் தலைவர் திரு.பழனி, யூதார் இந்திய கலாச்சார மொழிக்கழகத்தினர் ஏற்றுக்கொண்ட இப்பணியானது மிகவும் பாராட்டுக்குரியது என புகழாரம் சூட்டினார். அதேவேளை, மருத்துவர் திரு.சிவாமுரளிதரன் முனியாண்டி அவர்களுக்கும் தன் நன்றியை தெரிவித்துக்கொண்டார்.
இதன் மூலமாக, யூதார் இந்திய கலாச்சார மொழிக்கழக்கத்தின் ஏற்பாட்டின் வாயிலாக இதுவரை 15 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான புத்தகங்கள் 270 மாணவர்களுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன. இத்திட்டம் வெற்றிகரமாக நடந்தேறியதற்கு ஆதரவு நல்கிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் கழகத்தினர் தங்களது நன்றியை தெரிவித்துக்கொண்டனர்.