துன்னுக்குப் பின் நின்ற தூண், அதுவும் சாய்ந்ததுவே

அன்பு, அறிவு, ஆற்றல், மேலாக அமரருள் உய்க்கும் அடக்கம் ஒருங்கமையப் பெற்ற ஓர் ஒப்பற்ற அன்னை, தலைவி, தோ புவான் உமா சம்பந்தனின் மறைவுச் செய்தி ஏற்க முடியாததொன்றாய் நம்மைத் துயரத்தில் ஆழ்த்துகிறது.

மலாயா தேசத்தின் சுதந்திர விடியலைக் காண வைத்த தேசத் தந்தை துங்கு அப்துல் ரஹ்மான், சுதந்திரத்தின் வருகையை மெர்டேக்கா! மெர்டேக்கா! மெர்டேக்கா! என்று முழக்கமிட்டு வரவேற்றபோது (31.8.1957), அவருடன் அவருக்குப் பின்னால் நின்ற துன் சம்பந்தனுடன் நின்று தேச விடுதலையை வரவேற்ற வரலாற்றுப் பெருமையும் பேறும் பெற்றவர் தோ புவான் உமா சம்பந்தன்.

சுதந்திர தேசத்தின் நிறுவனத் தந்தை என்று போற்றப்படும் துங்குவுக்குத் தோள் கொடுத்து நின்ற முக்கிய தலைவர்களில் ஒருவரான துன் வீ.தி. சம்பந்தனின் துணைவியார், ஒரு நாள் பிரதமரின் முதற்பெண்மணி, துணைப் பிரதமரின் இல்லக்கிழத்தி, மந்திரியின் மனைவி என்ற அடைமொழி, உறவுக்கு மேலாய், தன் அளவில் அவர் ஆற்றிவந்த பணிகளும் சேவைகளும் அளப்பரியாதவை, நம்மை மெய்சிலிர்க்க வைப்பவை.

தோட்டத் துண்டாடல், இந்திய சமூகத்தைச் சிதறடித்தபோது தலைவர் என்ற பொறுப்புணர்வில், சமூகத்திற்கு ஒரு காப்பாகத் துன் சம்பந்தன் நாடு முழுவதும் வீடு வீடாகச் சென்று, அந்தத் தோட்டம் இந்தத் தோட்டம் பப்பாளித் தோட்டம், படுத்தப் பாயைச் சுருட்டிக்கிட்டு எடுத்தாண்டி ஓட்டம்! என்ற நகைச்சுவை நாடோடிப் பாடலைத் தன்முனைப்பாற்றல் பாட்டாகப் பாடி, சிறு குருவிக்குக்கூட ஒரு கூடு உண்டு, உனக்கு ஒரு வீடு உண்டா? என்று கேட்டு, இந்தியச் சமூக உறுப்பினர்களின் சிந்தையைக் கிள்ளிப் பத்து, பத்து ரிங்கிட்டுகளாகச் சேர்த்துத் தோற்றுவித்த அந்தத் தேசிய நில நிதி கூட்டுறவு சங்கம் துன் சம்பந்தனுக்குப் பின்னர் தோ புவானின் தலைமை ஆற்றலாலும் டான்ஸ்ரீ சோமாவின் அயரா உழைப்பாலும் ஆரம்ப காலந்தொட்டு அவரின் தொடர்ந்த மேளாண்மைச் சீர்மையாலும் ஆலம் விருட்சமாக விழுதூன்றித் தழைத்து நின்று, இன்று இந்திய சமூகத்தின் மண்ணுடைமைக்கும் பொருளாதார மேம்பாட்டுக்கும் மட்டும் அல்லாமல், சமுதாயப் பணி, கல்விப்பணி, இலக்கிய வளர்ச்சி, கலைத் தொண்டு என்று பல்வேறு சமுதாயத் தேவைகளுக்கும் நிதியுதவி அளித்து நிமிர்ந்து நிற்கிறது!

இந்த வரலாற்றுப் பரிமாணங்களில், தோ புவானின் உளமார்ந்த அர்ப்பணிப்புகள் என்றும் முத்திரைகளாகப் பரிணமிக்கும். ம.இ.கா. தேசியத் தலைவர், தொழிலாளர் அமைச்சர், சுகாதார அமைச்சர், தபால் தந்தித்துறை அமைச்சர், தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் என்ற அரசுப் பொறுப்புகளில், ஏறத்தாழ இருபது ஆண்டுகள் சமூகப் பணியும் தேசப் பணியும் ஆற்றி மறைந்த நாட்டு மக்களின் நெஞ்சங்களில் என்றும் நிலைத்து நிற்கும் மக்கள் தலைவர் துன் வீ.தி. சம்பந்தனுக்குப் பின்னால் தூணாக நின்று கரங்கொடுத்தவர் தோ புவான்.

தோ புவான் உமா சம்பந்தன், பிறருக்கு என்று ஆற்றிவந்த அறப்பணிகளாலும் சமுதாய, சமயப் பணிகளாலும் ஆயிரமானோர் வாழ்க்கையில் விளக்கேற்றி வைத்தவர். கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்து உதவிக் கரம் நீட்டுபவர்.

பெண்களின் முன்னேற்றத்தில் அக்கறையும் அயராத ஆர்வமும் கொண்டு தேசிய மகளிர் இயக்கத்தை நிறுவி பங்களிப்பு நல்கியதுடன் நில்லாமல் அனைத்துலக அரங்குகளிலும் அவரின் அறிவையும் ஆற்றலையும் நிரூபித்துக் காட்டி நாட்டுக்கு நற்பெயரை ஈட்டித் தந்தவர் தோ புவான் உமா.

மலேசிய இந்திய சமூகத்தில் ஈடு இணையற்ற தலைமைத்துவத்தை வழங்கிய தம்பதியர் என்ற வரலாற்றுப் பதிவில் மட்டுமன்றி மக்கள் மனங்களிலும் துன் சம்பந்தனுடன் இணைந்து தோ புவான் உமாவும் என்றும் நிலைத்திருப்பார்! நிலமிசை நீடு வாழ்வார்.

அன்னையின் பிரிவால் ஆழ்ந்திருக்கும் சகோதரி குஞ்சரிக்கும் குடும்பதாருக்கும் அன்பு உறவுகளுக்கும் நட்புகளுக்கும் இரங்கலும் அனுதாபங்களும்!
தோன்றி மறையும் சகாப்தங்கள்! தோ புவான் உமா சம்பந்தன் அவர்களோ எங்கும் எப்போதும் புகழொடு தோன்றி, மறையாத ஒரு வரலாற்று சாசனம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here