ஜாலான் ஈப்போ பிபிஆர் அடுக்ககத்தில் கைகலப்பு 20 பேர் கைது

 

ஜாலான் ஈப்போ பிபிஆர் அடுக்ககம் ஒன்றில் கும்பல்களுக்கிடையில் ஏற்பட்ட மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

நேற்று இரவு 10.50 மணியளவில் அடுக்ககத்தின் கார் நிறுத்தும் இடத்தில் ஏற்பட்ட மோதலில் மலாய்காரர்கள் இந்தியர்கள் என இரு கும்பல் ஈடுப்பட்டிருந்ததாக கோலாலம்பூர் போலீஸ் படைத் தலைவர் டத்தோஸ்ரீ ஹாஜி மஸ்லான் பின் லாசிம் தெரிவித்தார்.

இந்தியர்கள் சிலரின் குடும்ப பிரச்சினைகள் தொடர்பில் முதலில் சண்டை நடந்துள்ளது. அப்போது அங்கிருந்த சில மலாய்க்கார ஆடவர்களின் செயல்களால் இரு கும்பல்களுக்கிடையில் சண்டை மூண்டது என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

அச்சண்டையின் போது அங்கிருந்த குடியிருப்பாளர்களின் கார்கள் சேதம் அடைந்துள்ளன. ஆனால் இதுவரையில் எவ்வித புகார்களையும் போலீஸார் பெறவில்லை என அவர் கூறினார்.

இச்சம்பவம் தொடர்பில் 13 மலாய் ஆடவர்களும் 7 இந்திய ஆடவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் ஒரு இந்திய ஆடவருக்கு விரலில் காயம் ஏற்பட்டுள்ளது. மற்றவர்களுக்கு காயம் ஏதும் இல்லை. கைது செய்யப்பட்ட அனைவரும் விசாரணைக்காக 4 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இதில் ஈடுப்பட்ட மற்றவர்களையும் போலீஸார் தேடி வருகின்றனர்.

உலகையே உலுக்கி வரும் கோவிட் 19 நோய் தொற்றை எதிர்த்து நாம் போராடிக் கொண்டிருக்கும் இவ்வேளையில் அனைவரும் ஒற்றுமையுடன் இருந்து ஒத்துழைக்க வேண்டும். இது போன்ற பொறுப்பற்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று டத்தோஸ்ரீ மஸ்லான் கேட்டு கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here