கங்கையில் நீராடினால் செய்த பாவங்கள் நீங்கி விடுமா?

கங்கைக்கு, ‘புனிதமானது’, ‘பரிசுத்தமானது’ என்ற பெயர்களும் உண்டு. புனித நீர் என்றாலே நம் நினைவுக்கு வருவது கங்கைதான். அசுத்தமான இடத்தில் கங்கையை தெளித்தால் அந்த இடம் புனிதமாகும் என்பது நம்பிக்கை.
இமயமலையில் சுமார் 22 ஆயிரம் அடி உயரத்தில் கங்கை உற்பத்தியாவதாக சொல்லப்படுகிறது. 10,300 அடி உயரத்தில் பாகீரதி நதியாக வெளிப்பட்டு, தேவப்பிரயாகை என்ற இடத்தில் அலகநத்தா என்ற நதியுடன் இணைந்து கங்கையாக பாய்கிறது.
கங்கை உற்பத்தியாகும் இடத்திலிருந்து சுமார் 16 கிலோமீட்டர் தூரத்தில், கங்கை நதிக்கரையில் ஒரு கோவில் உள்ளது. அதன் பெயர் ‘கங்கோத்ரி.’ கங்கை நதிக்காக எழுப்பப்பட்ட முதல் கோவில் இது. கங்கோத்ரியில் இருந்து சுமார் 250 கிலோமீட்டர் பயணித்து, ஹரித்வாரை அடைகிறது கங்கை. அங்கிருந்து ஏழு கிளைகளாகப் பிரிந்து தன் பயணத்தை தொடர்கிறது.

கங்கை நதியின் பயண வழியில் மிகுந்த சிறப்பு வாய்ந்த தலமாக காசி (வாரணாசி) திகழ்கிறது. கங்கையில் நீராடியவர்களின் ஏழு தலைமுறைகளை பாவம் அணுகாது. எனவேதான் பகீரதன் என்ற மன்னன், தவம் செய்து ஆகாய கங்கையை, தன் மூதாதையர் பாவம் நீங்க பூலோகத்திற்கு கொண்டு வந்தான்.கங்கை நீரை ஒரு செம்பு பாத்திரத்தில் சேகரித்து வைத்து, பின்னர் அந்த பாத்திரத்தை நன்றாக மூடி வைக்க வேண்டும். அந்த நீர் வருடக்கணக்கானாலும் கெடாமல் இருக்கும் என்கிறார்கள். இதனால்தான் கங்கை ‘புனித நதி’ என்று அழைக்கப்படுகிறது.

ஒருவர் கங்கையில் நீராடினால், பிறந்த நொடியில் இருந்து அவர் செய்த பாவங்கள் அனைத்தும் விலகிவிடும். இறந்தவர்கள் அஸ்தியை கங்கையில் கரைப்பதால் அவர்களின் ஆன்மா சொர்க்கத்திற்கு செல்லும் என்பது நம்பிக்கை.

கங்கையின் பிறப்பிடம் இமயமலையில் உள்ள ‘கோமுகி’ என்று கூறப்படுகிறது. இந்தப் பகுதி ஒரு சிறிய சுனைபோலத்தான் காட்சியளிக்குமாம். ஆனால் உண்மையில் கங்கையின் பிறப்பிடமானது யாரும் காண இயலாத நிலையில் இருப்பதாகவே ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ஏழு புண்ணிய நதிகளில் முதலிடம் கங்கைக்குதான். அந்த கங்கை நதிக்கு மரியாதை செலுத்தும் வகையில், தினந்தோறும் மாலை வேளையில், கங்கை நதிக்கரையில் கங்கைக்கு பூஜை செய்வது வழக்கமான ஒன்று. இந்த பூஜைக்கு ‘கங்கா ஆரத்தி’ என்று பெயர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here