20 நாள் முகநூல் பழக்கத்தில் 11 பவுன் நகையை இழந்த பெண்

குமரி மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு திருமணம் ஆகி 3 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கணவருடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக விவாகரத்து பெற்று குழந்தைகளுடன் வசித்து வருகிறார். தற்போது அந்த பெண் 2-வது திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது.

இந்த நிலையில் அந்த பெண்ணுக்கு கடந்த 20 நாட்களுக்கு முன் முகநூல் (பேஸ்புக்) மூலம் ஒரு வாலிபர் அறிமுகமாகி இருக்கிறார். பின்னர் 2 பேரும் செல்போன் நம்பரை பரிமாறிக் கொண்டனர். இதைத் தொடர்ந்து அந்த பெண்ணும், வாலிபரும் செல்போன் மூலம் பேசிக் கொண்டனர். அப்போது வாலிபர் சம்பந்தப்பட்ட பெண்ணிடம் மிகவும் பாசமாகவும், அன்பாகவும் பேசியிருக்கிறார். ஆனால் தன்னுடைய புகைப்படத்தையோ, தான் வசிக்கும் இடத்தையோ வாலிபர் அந்த பெண்ணிடம் கூறவில்லை.

இதற்கிடையே வாலிபர், தான் பெட்ரோல் விற்பனை நிலையம் திறக்க இருப்பதாகவும், அதற்கு 50 லட்சம் ரூபாய் பணம் தேவைப்படுவதாகவும் பெண்ணிடம் கூறியிருக்கிறார். இதற்காக வங்கியில் லோன் கேட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால் லோன் பெறுவதற்கு முதலில் வங்கியில் 80 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் என்று கூறியதோடு, அதற்காக அந்த பெண் அணிந்திருந்த நகையை கேட்டுள்ளார். வாலிபரின் வசீகர பேச்சில் மயங்கிய அந்த பெண், தான் அணிந்திருந்த 11 பவுன் நகையை வாலிபரிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது.

அதாவது, நகையை அண்ணா பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு கவரிங் கடையில் வைத்து கொடுத்துள்ளார். வங்கிக்கு சென்று வருவதாக கூறி சென்றவர், அதன்பிறகு அவரை பற்றி எந்தவொரு தகவலும் இல்லை.

வாலிபரின் செல்போன் தொடர்ந்து சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. தொடர்ந்து இதே நிலை தான் இருந்தது. அதன் பிறகு தான் வாலிபரிடம் நகையை கொடுத்து ஏமாந்தது அந்த பெண்ணுக்கு தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த சம்பந்தப்பட்ட பெண் கோட்டார் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். ஆனால் சம்பந்தப்பட்ட வாலிபர் தொடர்பாக அந்த பெண்ணுக்கு எந்த விவரங்களும் தெரியவில்லை. எனவே நகை கொடுக்கப்பட்ட கடைக்கு போலீசார் சென்றனர். அங்குள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது நகையை வாங்கிச் செல்லும்போது வாலிபர் முக கவசம் அணிந்து இருந்தது தெரிய வந்தது. இதனால் வாலிபரை போலீசாரால் அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை.

மேலும் வாலிபரின் முகநூல் கணக்கை போலீசார் ஆய்வு செய்தனர். அதுவும் போலியாக உருவாக்கப்பட்டது கண்டு பிடிக்கப்பட்டது. அதில் வாலிபரின் புகைப்படமோ, முகவரியோ இல்லை. எனவே இதுபோல போலியாக கணக்குகள் தொடங்கி பலரை வாலிபர் ஏமாற்றி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வாலிபரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here